Asian Games 2023 | இந்தியா 8 தங்கம் உள்ளிட்ட 33 பதக்கங்களுடன் 4-ம் இடத்தில் நீடிப்பு!
ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், ஸ்குவாஷ், தடகளம் ஆகியவற்றில் பதக்கம் வென்றுள்ளது. அதேநேரத்தில் சில முக்கியப் போட்டிகளில் இறுதி, காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் 6 தங்கமும், மகளிர் கிரிக்கெட் மற்றும் குதிரையேற்றத்தில் தலா 1 தங்கம் என 8 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. மொத்தமாக 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலத்துடன் 33 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
- ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழு: இந்த பிரிவில் 1769 புள்ளிகளை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது ஐஸ்வர் பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் அடங்கிய இந்திய குழு.
- மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு: 1731 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது இந்தியா. ஈஷா சிங், பாலக் மற்றும் திவ்யா ஆகியோர் இதில் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர்.
- மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர்: இந்த பிரிவில் இந்தியாவின் பாலக் தங்கமும், ஈஷா சிங் வெள்ளியும் வென்றனர்.
- டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா-போசலே ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
- ஸ்குவாஷ்: இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது. ஆடவர் அணி மலேசியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளது.
- ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தனிநபர்: ஐஸ்வர் பிரதாப் சிங் தோமர் வெள்ளி வென்றார்.
- மகளிர் குண்டு எறிதல்: இந்தியாவின் கிரண் வெண்கலம் வென்றார்.
- குத்துச்சண்டை: மகளிர் 45-50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- சதுரங்கம்: இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் ரவுண்ட் 1-ல் வெற்றி.
- மகளிர் ஹாக்கி: குரூப்-ஏ போட்டியில் இந்தியா 6-0 என்ற கணக்கில் மலேசியாவை வென்றது.
- தடகளம்: 400 மீட்டர் ஹீட்ஸ் - அஜ்மல் இறுதிக்கு தகுதி.
- பாட்மிண்டன்: இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி.
- டேபிள் டென்னிஸ்: மணிகா பாத்ரா, மனவ் தாக்கர், மனுஷ் ஷா காலிறுதிக்கு தகுதி. மகளிர் இரட்டையர் பிரிவிலும் இந்தியா தகுதி.
- நீச்சல்: அத்வைத், 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் இறுதிக்கு தகுதி. ஸஜன் பிரகாஷ், 200 மீட்டர் பட்டர்பிளை இறுதிக்கு தகுதி.
- சீனா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகள் பதக்கப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.