உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு!

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். முன்னதாக, அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றின் போது இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்தார். அதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை. இந்தச் சூழலில் அவர் காயத்தில் இருந்து குணமடையாத சூழலில் அஸ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷூப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

உலகக் கோப்பை தொடரில் அஸ்வின்: 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அஸ்வின் விளையாடி உள்ளார். மொத்தமாக 10 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இந்திய அணிக்காக 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின், 155 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவர் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 5 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இந்திய ஆடுகளத்தில் அவரது மாயாஜால சுழற்பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு இம்சை கொடுக்கும். இந்திய அணி அக்.8-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE