2011-ம் ஆண்டு உலக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் இணைந்து நடத்தின. முதன்முறையாக உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் வங்கதேசத்தில் நடத்தப்பட்டன. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகள் மற்றும் கனடா, அயர்லாந்து, கென்யா, நெதர்லாந்து ஆகிய 4 உறுப்பு நாடுகள் என 14 அணிகள் பங்கேற்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இருந்தும் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ‘பி’ பிரிவில் இருந்தும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தன. லீக் சுற்றில் தோனி தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை டையில் முடித்திருந்தது.
கால் இறுதி சுற்றில் இந்திய அணியானது சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கின் மூலம் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான், இலங்கை, நியூஸிலாந்து அணிகளும் அரை இறுதியில் நுழைந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் சச்சின் டெண்டுல்கர் சேர்த்த 85 ரன்கள் உதவியுடன் 261 ரன்களை இலக்காக கொடுத்தது இந்திய அணி. இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 231 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பந்து வீசிய 5 பந்து வீச்சாளர்களுமே (ஜாகீர்கான், ஆசிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங்) தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் கம்பீரமாக நுழைந்தது. மற்றொரு அரை இறுதியில் இலங்கை, நியூஸிலாந்து அணியை தோற்கடித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் இரு ஆசிய நாடுகள் பலப்பரீட்சை நடத்தியது இதுவே முதல் முறையாக நிகழ்ந்திருந்தது. மேலும் 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி இல்லாத இறுதிப் போட்டியாகவும் அமைந்திருந்தது.
» ஆசிய விளையாட்டு போட்டி - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம்
» அதிக ரன், அதிவேக சதம், அரை சதம்: டி 20-ல் சாதனைகளை தகர்த்த நேபாளம் அணி
முதலில் பேட் செய் இலங்கை அணி மகேலா ஜெயவர்த்தனே 88 பந்துகளில் விளாசிய 103 ரன்கள் உதவியுடன் 6 விக்கெட்கள் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் இலக்கைதுரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சி அளித்தது. வீரேந்தர் சேவக் 0, சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் மலிங்கா பந்தில் நடையைகட்டினர். 31 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கவுதம் கம்பீர், விராட் கோலி கூட்டணி அமைத்து அணியை முன்னெடுத்துச் சென்றனர். விராட் கோலி 35 ரன்களில் தில்ஷான் பந்தில் வீழ்ந்தார். அப்போது ஸ்கோர் 21.4 ஓவர்களில் 114 ரன்கள் என இருந்தது.
அடுத்ததாக சிறந்த பார்மில் இருந்த யுவராஜ் சிங் களமிறங்க ஆயத்தமாக இருந்தார். ஆனால் நடு ஓவர்களில் முத்தையா முரளிதரன் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்பதால் கேப்டன் தோனி தாமாகவே முன்வந்து யுவராஜ் சிங்குக்கு பதிலாக 4-வது வரிசையில் களமிறங்கினார். இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக முரளிதரன் விளையாடி இருந்த போது அவரது பந்து வீச்சை தோனி நன்கு அறிந்து வைத்திருந்ததுதான்.
கவுதம் கம்பீருடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு நகர்த்தி சென்ற தோனி, தேவையான நேரத்தில் நிதானமும், அதிரடியும் காட்டினார். வெற்றிக்கு 52 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கவுதம் கம்பீர் பெரேரா பந்தில் போல்டானார். இந்த கூட்டணி சேர்த்த 109 ரன்கள் சிறப்பம்சமாக இருந்தது. இதன் பின்னர் யுவராஜ் சிங்குடன் இணைந்து 54 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை தோனி அமைக்க இந்திய அணி வெற்றிக் கோட்டை கடந்தது. குலசேகரா வீசிய 49-வது ஓவரின் 2 பந்தை பந்தைதோனி தனது பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்டாகசிக்ஸருக்கு விளாச இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றமுதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. தோனி 79 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் விளாசி, உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் கோப்பை தாகத்தை தீர்த்து வைத்தார்.
இந்தத் தொடரில் சச்சின் 482 ரன்களை வேட்டையாடி இருந்தார். நடுவரிசையில் யுவராஜ் சிங் 362 ரன்கள் சேர்த்ததுடன் பந்து வீச்சில் 15 விக்கெட்களையும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தார். 24 வருடங்கள் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவை தோளில் சுமந்திருந்த சச்சின்டெண்டுல்கரின் கனவை தோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பட வைத்திருந்தது. இதை பிரதிபலிக்கும் விதமாக இறுதிப் போட்டியின் வெற்றி கொண்டாட்டத்தில் சச்சினை இந்திய அணி வீரர்கள் தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்திருந்தனர்.
பறிபோன வாய்ப்பு: 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தானும் இணைந்து நடத்துவதாக இருந்தது. ஆனால் 2009ம் ஆண்டு அந்நாட்டில் விளையாடிய இலங்கை அணி சென்ற வாகனத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதால் பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்த 14 ஆட்டங்களும் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இறுதிப் போட்டி:
அதிக ரன்கள், விக்கெட்கள்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago