அதிக ரன், அதிவேக சதம், அரை சதம்: டி 20-ல் சாதனைகளை தகர்த்த நேபாளம் அணி

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் மங்கோலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் அணி 3 சாதனைகளை தகர்த்து புதிய சாதனை படைத்தது.

ஹாங்சோவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்கள்குவித்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்னர் எந்த அணிகளும் 300 ரன்களை எட்டியது கிடையாது. அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்கள் குவித்திருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது நேபாளம் அணி.

மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் அணியின் இடது கை பேட்ஸ்மேனான குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகியோர் 35 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையும் தகர்ந்துள்ளது.

குஷால் மல்லா 50 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 5-வது வீரராக களமிறங்கிய தீபேந்திர சிங்ஐரி 9 பந்துகளில் அரை சதம் விளாசி, இந்தியாவின் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். இந்த சாதனையை தீபேந்திர சிங்ஐரி 9 பந்துகளில் அரை சதம் அடித்து தகர்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர், 10 பந்துகளில், 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

315 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மங்கோலியா அணி 13.1 ஓவர்களில் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நேபாளம் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டுதுருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் செக்குடியரசு 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் அணி 26 சிக்ஸர்களை பறக்கவிட்டது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பெருமையும் நேபாளத்துக்கு கிடைத்துள்ளது. இந்த வகையில் இதற்கு முன்னர் அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 22 சிக்ஸர்கள் விளாசி இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE