“தமிம் இக்பாலைத் தேர்வு செய்தால் உலகக் கோப்பை ஆட மாட்டேன்” - ஷாகிப் அல் ஹசன் மிரட்டலா?

By ஆர்.முத்துக்குமார்

ஓய்வு அறிவிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள வங்கதேசத்தின் ஆகச்சிறந்த பேட்டர் தமிம் இக்பால், 2023 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துள்ளது.

இதற்குக் காரணம் தமிம் இக்பாலின் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் என்றும். தமிம் இக்பாலே அணித் தேர்வுக்குழுவிடம் தன்னைத் தேர்வு செய்தால் தன் முதுகு காயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்னொரு புறம் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், தமீமை தேர்வு செய்தால் தான் கேப்டன்சியை உதறுவேன் என்று மிரட்டியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

50 ஓவர் உலகக் கோப்பை நெருங்கும் போது. 2023-ல் வங்கதேசத்தின் ஒருநாள் போட்டியின் ஆட்டம் சிறப்பாக இல்லை. இதுவரை 30 ஆட்டங்களில் 19-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது அணிக்கு ஒரு தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் 15 வீரர்கள் கொண்ட உலகக் கோப்பை அணியை வங்கதேசம் அறிவித்துள்ளது. தமிம் இக்பால் 2023 ஆசியக் கோப்பையிலிருந்தும் காயம் காரணமாக விலக்கப்பட்டார். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த 2-வது ஒருநாள் போட்டியில் வந்து ஆடி 58 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். ஆனாலும் வங்கதேசம் 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் தமிம் இக்பால் ஆடவில்லை.

வங்கதேசம் முதலில் பேட் செய்து ஆடம் மில்னே வேகத்தில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்ட்டோ மட்டுமே அதிகபட்சமாக 76 ரன்களை எடுத்தார். 34.3 ஓவர்களில் வங்கதேச இன்னிங்ஸ் முடிய, நியூஸிலாந்து இலக்கை வெற்றிகரமாக விரட்டி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

இந்நிலையில், வங்கதேச ரசிகர்களின் அன்பிற்கும் நேயத்திற்கும் பாத்திரமான தமிம் இக்பால், உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்று பலரும் விரும்பினர். ஆனால் தமிம் தேர்வாகவில்லை. இதற்குக் காரணம் ஷாகிப் அல் ஹசன் தான் என்று அங்கு ஊடகச் செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன.

தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டால் அவரால் 5 போட்டிகளை மட்டுமே ஆட முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் ஷாகிப் அல் ஹசன், பாதி ஃபிட் உடைய தமீமை தேர்வு செய்தால் கேப்டன்சியை மட்டும் உதற மாட்டேன், உலகக் கோப்பை போட்டிகளிலிருந்தே விலகி விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக சோமோய் டிவி செய்திகளின் படி ஷாகிப், தமிம் இக்பால், பயிற்சியாளர் ஹதுர சிங்கா ஆகியோர் வங்கதேச வாரியத் தலைவரைச் சந்தித்தபோது ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பாலைத் தேர்வு செய்யக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷனே போட்டதாகக் கூறியுள்ளது. தமிம் போன்ற ரசிகர்களின் அன்பிற்குரிய வீரரை ஷாகிப் புறக்கணித்திருப்பதால் வங்கதேச ரசிகர்கள் ஷாகிப் மீது கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

வங்கதேச உலகக் கோப்பை அணி: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், தான்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாண்ட்டோ, தவ்ஹித் ஹிருதய், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்முதுல்லா, மெஹதி ஹசன், நசும் அகமட், ஹசன் மஹ்மூத், டஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE