1999-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலக கிரிக்கெட் அரங்கில் அந்த அணி தொடர்ச்சியாக நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்துவதற்கு இங்கிருந்துதான் அச்சாரம் போடப்பட்டது. உலக அரங்கில் சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்த ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் வென்று வேறு எந்த அணியும் செய்யாத ‘ஹாட்ரிக்’ சாதனையை நிகழ்த்தியது.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சுழல் ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்னின் அபாரமான செயல் திறன் ஆஸ்திரேலிய அணி 12 வருடங்களுக்குப் பிறகு மகுடம் சூட பெரிதும் உதவியது. ஷேன் வார்ன், இந்தத் தொடரில் 20 விக்கெட்களை வேட்டையாடி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் நியூஸிலாந்தின் ஜெஃப் அலாட்டுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்தார்.
தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னின் பந்து வீச்சு மற்ற அணிகளுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியான ஸ்காட்லாந்தை 181 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதில் வார்னின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷேன் வார்ன் 10 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட் சாய்த்தார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட கிளென் மெக்ராத் 5 விக்கெட்களை கொத்தாக அள்ள மேற்கு இந்தியத் தீவுகள் 110 ரன்களில் சுருண்டிருந்தது.
லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து சூப்பர் சிக்ஸ் சுற்றில் நுழைந்தது ஆஸ்திரேலிய அணி. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் முன்னேற்றம் கண்டன. இந்த சுற்றிலும் ஆஸ்திரேலிய 3வெற்றிகள் பெற்று அரை இறுதியில் நுழைந்தது. நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரை இறுதியில் கால்பதித்தன.
அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் தனது மாயா ஜாலங்களை நிகழ்த்தினார் ஷேன் வார்ன். அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது ஷான் பொலாக், ஆலன் டொனால்டு ஆகியோரது வேகத்தில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. அப்போதுதான் ஷேன் வார்ன் கொண்டுவரப்பட்டார். தனது அடுத்தடுத்த ஓவர்களில் தொடக்க வீரர்களான ஹெர்ஷல் கிப்ஸ், கேரி கிர்ஸ்டனை போல்டாக்கினார். இதில் கிப்ஸின் விக்கெட் ஆஸி.யின் சிறந்த ஒருநாள் விக்கெட்களில் ஒன்றாகும். ஏனெனில் ஷேன் வார்ன் லெக்-ஸ்டம்ப் திசையில் பந்தை வீசி ஆஃப் ஸ்டம்பை சிதற வைத்திருந்தார்.
அதேவேளையில் கிர்ஸ்டன் ஸ்வீப் ஷாட்டை தவறவிட ஆஃப் ஸ்டெம்ப் வேரோடு பிடுங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க கேப்டன் ஹன்சி குரோனியேவும், வார்னேவின் பந்துவீச்சு திறமைக்கு பதிலடி கொடுக்க முடியாமல் முதல் சிலிப்பில் மார்க் வாஹ்ஹிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த 3 விக்கெட்களையும் வார்ன் 8 பந்துகள் இடைவெளியில் வீழ்த்தி இருந்தார்.
இதன் பின்னர் தனது கடைசி ஸ்பெல்லில் தென் ஆப்பிரிக்காவை மீண்டும் ஆட்டம் காண வைத்தார். அப்போது அந்த அணி வலுவான நிலையில் இருந்தது. 32 பந்துகளுக்கு 39 ரன்களே தேவையாக இருந்த நிலையில் களத்தில் வேரூன்றியிருந்த ஜேக் காலிஸை (91 பந்துகளில் 53 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். அவர், தனது பந்து வீச்சை 29/4 (10 ஓவர்கள்) என நிறைவு செய்தார். இதில் 4 மெய்டன்களும் அடங்கும்.
ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் லான்ஸ் க்ளூஸ்னர் தனது அதிரடியால் வெற்றியின் விளிம்புக்கு தென் ஆப்பிரிக்காவை அழைத்துச் சென்றார். ஆனால் ஸ்கோர் சமனில் இருந்த போது கடைசி வீரரான ஆலன் டொனால்டு ரன்அவுட்டில் வெளியேறினார். சூப்பர் சிக்ஸ் சுற்றில்ஆஸ்திரேலிய அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன் ரேட் வைத்திருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரை இறுதியில் பாகிஸ்தான், நியூஸிலாந்தை தோற்கடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்த நிலையில் ஷேன் வார்னின் சுழலில் 39 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஷேன் வார்ன் 33 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா கில் கிறிஸ்டின் விரைவான அரை சதத்தால் 20.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து சாம்பியன் பட்டம் வென்றது.
‘உறையவைத்த’ ரன் அவுட்: ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா இடையிலான அரையிறுதிப் போட்டி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆட்டமாக அமைந்தது. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 39 ரன்கள் தேவையாக இருந்தன. அப்போது காலிஸ், பொலாக், மார்க் பவுச்சர், ஸ்டீவ் எல்வோர்த்தி ஆகியோர் வரிசையாக நடையை கட்டினார். எனினும் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசி அணியை இறுதிப் போட்டியின் வாயிலுக்கு கொண்டு சென்றார் லான்ஸ் க்ளூஸ்னர்.
முதல் முறையாக அந்த அணி இறுதிப் போட்டியில் நுழையப் போகிறது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவையாக இருந்த நிலையில் கடைசி விக்கெட்டான ஆலன் டொனால்டு, க்ளூஸ்னரிடன் தவறான அழைப்பால் ரன் அவுட் ஆனார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் இறுதிப் போட்டி கனவு சிதைந்தது.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்தொடரை இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய 5 நாடுகள் இணைந்து நடத்தின. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் நடத்தப்பட்டது. 9 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுடன் உறுப்பினர் நாடுகளான கென்யா, வங்கதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அறிமுகமாயின. மொத்தம் 42 ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
சூப்பர் 6 அறிமுகம்: 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற 12 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்று சூப்பர் 6 என அழைக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் இந்த சுற்று முதன்முறையாக அறிமுகமானது. இந்த சுற்றில் முதல் 4 இடங்களை பிடித்த 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அங்கிருந்து 2 அணிகள் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்தின.
தடுமாறிய இந்திய அணி: 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் மொகமது அசாரூதீன் தலைமையில் 3-வது முறையாக களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. எனினும் அடுத்த 3 ஆட்டங்களில் கென்யா, இலங்கை, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றில் நுழைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
அதிக ரன்கள், விக்கெட்கள்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago