ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளான நேற்று இந்தியா 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல் (632.5), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (631.6), திவ்யான்ஷ் சிங் பன்வார் ( 629.6), ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1893.7 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது. கொரியா அணி 1890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீன அணி 1888.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் பெற்றன.
ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிடு பையர் பிஸ்டல் அணிகள் பிரிவில் அனிஷ் பன்வலா, விஜய்விர் சித்து, ஆதர்ஷ் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1718 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஷெங் லிஹாவோ உலக சாதனையுடன் 253.3 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், தென்கொரியாவின் ஹஜுன் பார்க் 251.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதகக்மும் வென்றனர்.
படகு போட்டி: படகு போட்டியில் இந்தியா 2 வெண்கலப் பதக்கம் வென்றது. 4 பேர் கலந்து கொள்ளும் படகோட்டத்தில் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆஷிஸ் கோலியன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி நூலிழையில் வெள்ளிப் பதக்கத்தை தவறவிட்டு வெண்கலப் பதக்கம் வென்றது. பந்தய தூரத்தை இந்திய அணி 6:10.81 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் (6:04.96) தங்கப் பதக்கமும், சீனா (6:10.04) வெள்ளிப் பதக்கமும் வென்றன. இதேபோன்று ஸ்கல்ஸ் பிரிவில் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜகர் கான், சுக்மீத் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 6:08.61 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
மகளிர் கிரிக்கெட்… மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் ரனவீரா, தசனாயகா, கலுவா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
117 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஹாசினி 25, நிஷங்கா 23 ரன்கள் சேர்த்தனர். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி தரப்பில் திதாஸ் சாது 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
போபண்ணா ஜோடி தோல்வி: டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் செர்ஜி ஃபோமின், குமோயுன் சுல்தானோவ் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரோகன் போபண்ணா ஜோடி தங்கப் பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்க நிலையிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மகளிருக்கான ஹேண்ட்பால் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-41 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது.
கூடைப்பந்து: 3X3 கூடைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்த்தில் 20-16 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மக்காவோ அணியுடன் மோதுகிறது.மகளிருக்கான 3X3 கூடைப்பந்து போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 14-19 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
ஜூடோகா: ஜூடோகாவில் மகளிருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கரிமா சவுத்ரி, பிலிப்பைன்ஸின் ரியோகோ சாலினாஸிடம் தோல்வி அடைந்தார்.
பிரணதி நாயக்: மகளிருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பிரணதி நாயக், வால்ட் மற்றும் ஆல் ரவுண்ட் பிரிவில் 12.716 புள்ளிகள் குவித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
வுஷு: வுஷு போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, கஜகஸ்தானின் அய்மான் கே-யை ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரைஇறுதி சுற்றில் ரோஷிபினா தேவி தோல்வி அடைந்தாலும் வெண்கலப் பதக்கம் பெறுவார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago