“தங்கமே.. தங்கமே..” - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்த சூழலில் தங்கம் வென்றுள்ளது குறித்து நெகிழ்ச்சியுடன் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்மிருதி மந்தனா.

சீனாவில் நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் போட்டிகள் நடைபெற்றன.

திங்கட்கிழமை (செப்.25) நடைபெற்ற தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்களை இந்தியா எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா, 46 ரன்கள் எடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், 42 ரன்கள் எடுத்திருந்தார். 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

“நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை நாம் பார்த்தோம். ஆசிய விளையாட்டில் இந்தியா தங்கம் வென்றதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்த தருணம் ரொம்பவே ஸ்பெஷல். தங்கம் தங்கம்தான். இன்று நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி” என ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE