ODI WC 2023 | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வர விசா வழங்கப்பட்டது!

By செய்திப்பிரிவு

சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் புதன்கிழமை (செப்.27) மாலை பாகிஸ்தான் அணி, துபாயில் இருந்து ஹைதராபாத் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியை அண்மையில் அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த தொடரில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் விளையாடுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, அக்டோபர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் அணி, இந்தியா வருவதற்கான விசா கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) முறையிட்டது. இந்நிலையில் தற்போது அந்த அணிக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணி வீரர்கள் வரும் புதன்கிழமை அன்று ஹைதராபாத் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 29-ம் தேதி நியூஸிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE