6 சதங்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை

By செய்திப்பிரிவு

இந்தூர்: குறைந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 சதங்களை விளாசி இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் நேற்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் அரை சதம் விளாசிய கெய்க்வாட், நேற்று 8 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.

இருவரும் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினர். அடுத்தடுத்து சதம் விளாசிய நிலையில் இருவரும் வீழ்ந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்கள் (90 பந்துகள், 11 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஷுப்மன் கில் 104 ரன்கள் (97 பந்துகள், 6 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் ஐயருக்கு இது 3-வது ஒரு நாள் போட்டி சதமாகவும், கில்லுக்கு 6-வது சதமாகவும் அமைந்தது.

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து, ஆடம் ஸம்பா பந்தில் அவுட்டானார். கேப்டன் கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் விளாசி கிரீன் பந்தில் வீழ்ந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.

சூர்யகுமார் யாதவ் 72 ரன்களும் (37 பந்துகள்), ரவீந்திர ஜடேஜா 13 ரன்களும் (9 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பின்னர் 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடத் தொடங்கியது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 2-வது ஓவரில் மேத்யூ ஷார்ட், கேப்
டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார் பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்
திருந்தபோது மழை குறுக்கிட்டு ஆட்டத்தைத் தடை செய்தது.

பின்னர் ஆட்டம் தொடங்கியபோது ஆஸ்திரேலிய அணிக்கு டிஎல்எஸ் முறைப்படி வெற்றி இலக்கு 33 ஓவர்களில் 317 ரன் கள் என நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. லபுஷேன் 27, ஜோஷ் இங்லிஸ் 6, டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் கேரி 9 ரன்களும், கிரீன் 10 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பின்னர், 28.2 ஓவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதிக சதம்: ஓராண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லும் இணைந்தார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை விராட் கோலி (4 முறை), ரோஹித் சர்மா (3 முறை), சச்சின் டெண்டுல்கர் (2 முறை), ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி, ஷிகர் தவண் (தலா ஒரு முறை) ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் குறைந்த ஒரு நாள் போட்டிகளிலேயே 6 சதங்களை விளாசியவர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்தார். ஷுப்மன் கில் 35 போட்டிகளிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ஷிகர் தவண் 46 போட்டிகளிலும், கே.எல்.ராகுல் 53 போட்டிகளிலும், விராட் கோலி 61 போட்டிகளிலும், கவுதம் கம்பீர் 69 போட்டிகளிலும் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE