அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுப்பு - சீனா சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார் அனுராக் தாக்குர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வூஷூ (தற்காப்புக் கலை விளையாட்டு) வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா, மேபங் லாம்கு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இவர்கள் 3 பேருக்கும் விசா வழங்க சீனா மறுத்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சீன அதிகாரிகள், இந்திய வீரர்கள் சிலருக்கு எதிராகப் பாரபட்சம் காட்டியுள்ளனர் என்பதை இந்திய அரசு அறிந்துள்ளது. குடியிருப்பு மற்றும் இனத்தின் அடிப்படையில் தனது குடிமக்களை வேறுபடுத்தி நடத்தப்படுவதற்கு எதிராக இந்தியா உள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். சீனாவின் பாரபட்ச நடவடிக்கைகளால் ஆசிய விளையாட்டுகளின் தன்மையையும், விதிமுறைகளையும் சீனா மீறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது சீன சுற்றுப்பயணத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விளையாட்டு வீரர்கள் சிலர் மீது சீனா காட்டியுள்ள பாகுபாட்டைக் கண்டித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது சீனப் பயணத்தை ரத்து செய்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

அருணாச்சல் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அடிக்கடி அப்பகுதியில் எல்லையைத் தாண்டி நிலைகளை அமைப்பதும், அத்துமீறி நுழைவதையும் சீன ராணுவம் செய்து வருகிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு அருணாச்சல் பிரதேச மாநிலத்தையும் சீனா தனது வரைபடத்தில் சேர்த்து வெளியிட்டிருந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE