ஐசிசி தரவரிசை பட்டியல் - அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதலிடம்!

By செய்திப்பிரிவு

மொகாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்றதன்மூலம் இந்திய அணி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ருதுராஜ் - கில் மற்றும் கே.எல்.ராகுல் - சூர்யகுமார் யாதவ் இடையே அபார கூட்டணி அமைந்திருந்தது அணியின் வெற்றிக்கு உதவியது.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து வலுவான கூட்டணி அமைத்தனர். வார்னர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித், 41 ரன்களில் வெளியேறினார். லபுஷேன் 39 ரன்கள், கேமரூன் கிரீன் 31 ரன்கள், ஸ்டாய்னிஸ் 29 ரன்கள், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்கள், கம்மின்ஸ் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் இன்னிங்ஸை தொடங்கினர். 142 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ், 71 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயர், 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கில், 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கிஷன், 18 ரன்களில் வெளியேறினார்.

பின்னர், இணைந்த கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவும் பொறுப்புடன் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் அரைசகம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 63 பந்துகளில் 58 ரன்களை எடுத்திருந்தார். ஜடேஜா, 3 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ஷமிக்கு அளிக்கப்பட்டது.

இதனிடையே, ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட், டி20 கிரிக்கெட் வடிவ போட்டியில் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலின் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE