IND vs AUS | ஆஸி.யை அபாரமாக கட்டுப்படுத்திய சமி - இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

மொகாலி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களைச் சேர்த்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இதில் முஹம்மது சமி வீசிய பந்தில் முதல் ஓவரிலேயே 4 ரன்களுடன் வெளியேறினார் மிட்செல் மார்ஷ். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் கைகோத்தார். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினர். 18 ஓவர் வரை விக்கெட் விழாமல் பார்த்துகொண்ட இந்த இணையை ரவிந்திர ஜடேஜா பிரித்து, அதிரடியாக ஆடிய டேவிட் வார்னரை 52 ரன்களில் விக்கெட்டாக்கினார். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 107 ரன்களைச் சேர்த்தது.

அடுத்து ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை சமி கைப்பற்ற 41 ரன்களில் ஸ்மித் பெவிலியன் திரும்பினார். மார்னஸ் லாபுசாக்னே - கேமரூன் கிரீன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, லாபுசாக்னே 39 ரன்களிலும், கேமரூன் கிரீன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டோனிஸ் தன் பங்குக்கு 29 ரன்களைச் சேர்த்தார். ஜோஷ் இங்கிலிஸ் 2 சிக்சர்களை விளாசி சிறப்பாக ஆடினாலும் பும்ராவின் வேகத்தில் 45 ரன்களில் வீழ்ந்தார்.

சமியின் 49-வது ஓவரில் மத்தேயு ஷார்ட், சீன் அபோட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா தடுமாறியது. கடைசி கட்டத்தின் பேட் கம்மின்ஸ் அதிரடி காட்ட ஷர்த்துல் தாக்கூர் வீசிய கடைசி பந்தில் ரன் அவுட்டானார். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 276 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முஹம்மது சமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE