அஸ்வின் vs வாஷிங்டன் சுந்தர்: உலகக் கோப்பை அணியில் யாருக்கு வாய்ப்பு?

By செய்திப்பிரிவு

எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அக்சர் படேல் உடற்தகுதியுடன் இருந்தால் அவர்கள் இருவருக்கும் அணியில் வாய்ப்பு என்பது கடினம் என்றே தெரிகிறது. இந்த சூழலில் அது குறித்து பார்ப்போம்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. நாளை தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை. 37 வயதான அஸ்வின், 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 23 வயதான வாஷிங்டன் சுந்தர் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்த தொடரில் அவர்கள் இருவரும் செயல்படும் விதத்தை அகர்க்கர் தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு கருத்தில் கொள்ளும் என தெரிகிறது. “எனக்கு தெரிந்து அணியில் அஸ்வின் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அணி நிர்வாகம் ஸ்பின் பவுலிங் ஆப்ஷனை கருத்தில் கொண்டால் அஸ்வினுக்கு வாய்ப்பு உறுதி. அதுவே பேட்டிங் மற்றும் பவுலிங் என வைத்துக் கொண்டால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு அக்சர் படேல் உடற்தகுதியுடன் இருப்பார் என்று நம்புகிறேன். அவர், உடற்தகுதியுடன் இருந்தால், அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாலும், உலகக் கோப்பை தொடரில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வார்” என இந்திய கிரிக்கெட் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

“வாஷிங்டன் சுந்தர், பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் திறன் கொண்டவர். நல்ல ஃபீல்டர். முக்கியமாக லோயர் மிடில் ஆர்டரில் பேட் செய்யும் இடது கை பேட்ஸ்மேன். அவர் ஒரு பேக்கேஜ் வீரராக உள்ளார்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அக்சர் படேல் அபாரமாக பேட் செய்கிறார். அதற்கு சான்று அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக அவர் ஆடிய இன்னிங்ஸ். ஆனால், அவரது பந்து வீச்சு சற்றே சங்கடம் தரும் வகையில் அமைந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். "ஒருபுறம் ஜடேஜா, மற்றொரு புறம் அஸ்வின் என்றால், இடது கை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார். இந்தியா - ஆஸி. உலகக் கோப்பை போட்டி சென்னையில் நடைபெறுகிறது. அதோடு சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் அஸ்வின் அபாயகரமான பவுலராக இருப்பார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் யார் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்கிறார்கள் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE