ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: முழுவீச்சில் தயாராகும் அஸ்வின்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎன்சிஏ விஏபி டிராபிக்கான தொடரில் பங்கேற்று சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் காயம் அடைந்தார். உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள அவர், முழு உடற்தகுதியை எட்டுவது சந்தேகமாகி உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடரில் அக்சர் படேலுக்கு பதிலாக சேர்க்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகும் விதமாக டிஎன்சிஏ விஏபி டிராபிக்கான தொடரில் அஸ்வின் களமிறங்கி உள்ளார். மயிலாப்பூர் பொழுபோக்கு மன்றம் ஏ அணிக்காக களமிறங்கி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தனது பங்களிப்பை வழங்கினார்.

யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மயிலாப்பூர் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. முகுந்த் 78, காதர் 79 ரன்கள் எடுத்தனர். அஸ்வின் 17 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். 286 ரன்கள் இலக்கை துரத்திய யங் ஸ்டார்ஸ் அணி 48 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தீரன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின் முழுமையாக 10 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE