“டி20 லீக்கில் கிடைக்கும் பணத்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விடை தருகிறேன்” - டிகாக்

By செய்திப்பிரிவு

டர்பன்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடர் தான் தென்னாப்பிரிக்க அணிக்காக டிகாக், விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர். அதன்பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த சூழலில் ஓய்வுக்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

30 வயதான டிகாக், சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2012 முதல் விளையாடி வருகிறார். இதுவரை 54 டெஸ்ட், 145 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தமாக 11,753 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து அவர் பேசியுள்ளார். “நான் 11 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். இந்த காலத்தில் அணிக்கு என்னால் இயன்றவரை விஸ்வாசமாக இருந்துள்ளேன். எனது கிரிக்கெட் கேரியரில் அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளேன் என எண்ணுகிறேன். ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளில் கிடைக்கும் பணத்துக்காக தான் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். அதை நான் மறுக்கவில்லை. எனது கேரியரின் கடைசி கட்டத்தில் தான் இதனை செய்கிறேன். எந்தவொரு சாமான்ய மனிதனும் செய்ய விரும்பும் செயல் இது. அதைத்தான் நான் செய்கிறேன்.

நான் அணிக்கு விஸ்வாசமாக இருந்திருக்கவில்லை என்றால் நிச்சயம் 5 ஆண்டுகளுக்கு முன்பே டி20 லீக் தொடர்களில் விளையாட சென்றிருப்பேன் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அப்போது ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடர்கள் உச்சத்தில் இருந்தன” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE