கவுன்ட்டி கிரிக்கெட் களேபரம்: சசெக்ஸ் அணி கேப்டன் புஜாரா உள்பட 4 வீரர்கள் சஸ்பெண்ட்!

By ஆர்.முத்துக்குமார்

கடந்த வாரம் லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக சசெக்ஸ் அணி ஆடிய இங்கிலிஷ் கவுன்ட்டி கிரிக்கெட்டில் வீரர்களுக்குள்ளே தள்ளுமுள்ளும், துடுக்குத்தனமான பேச்சும், நடுவர்களிடம் அளவுக்கதிகமாக முறையீடு செய்ததும் நடந்தது. இதன் மீது விசாரணை மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது சசெக்ஸ் அணியின் கேப்டன் புஜாரா உள்பட 4 வீரர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டிவிஷன் 1-க்கு முன்னேறும் வாய்ப்பு சசெக்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் மோசமான நடத்தைக் காரணமாக 12 புள்ளிகளையும் பறிகொடுத்தது சசெக்ஸ். கேப்டன் புஜாரா, அதிக விக்கெட்களை வீழ்த்திய ஆரி கர்வேலஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு ஆடும் இரண்டு சூரப்புலி வீரர்களான டாம் ஹெய்ன்ஸ், ஜாக் கார்சன் ஆகியோர் மீது இந்த சீசன் முழுவதும் பல்வேறு நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக நடந்து கொண்டதாலும், கேப்டன் புஜாரா தனது அணி வீரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் 499 ரன்கள் குவித்த சசெக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதென்றால் ஆட்டம் ஆடப்பட்ட விதத்தையும் ஆட்டத்தின்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் புரிந்து கொள்ளலாம்.

வீரர்கள் மோசமாக நடந்து கொண்ட தருணத்திலும் லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக நடுவர்கள் பலமுறை எச்சரித்தும் தேவையில்லாமல் அவுட் கோருவதும், ஆக்ரோஷமாக முறையீடு செய்வதும் தொடர்ந்தது. இது போன்ற தருணத்தில் கேப்டன் இருந்தார். ஆகவே அவருக்கு ஒரு போட்டி தடை என்று இசிபி தண்டனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தவறுகள் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் புஜாராதான் கேப்டனாக இருந்துள்ளார். மேலும் இதே சீசனில் டுர்ஹாம் அணிக்கு எதிராக புஜாராவின் நடத்தை மீறலும் கவனம் கொள்ளப்பட்டதால் அவர் ஆட்டோமேட்டிக்காக ஒரு போட்டி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக இசிபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லெய்செஸ்டர்ஷைர் போட்டியின் போது சசெக்ஸ் வீரர் கார்சன், எதிரணி வீரருடன் முறையற்ற விதத்தில் உடல் ரீதியாக மோதலைச் செய்ததால் தண்டிக்கப்பட்டுள்ளார். 499 ரன்கள் சேஸிங்கின் போது லெய்செஸ்டர்ஷைர் வீரர் பென் காக்ஸ் ஒரு ரன் எடுக்க ஓடிய போது அவரை கீழே தள்ள முயன்றதாக கார்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஹெய்ன்ஸ், கார்சன் இருவருமே தாங்கள் தவறு செய்ததாக ஒப்புக் கொண்டனர். தவறுக்கு மன்னிப்பும் கேட்டனர்.

ஓர் அருமையான அதிகபட்ச ஸ்கோர் மற்றும் விரட்டல் கொண்ட போட்டியில் இப்படிப்பட்ட சம்பவங்கள் கிரிக்கெட்டிற்கும் இங்கிலாந்து மீதான மரியாதைக்குமான பேரிழுக்கு என்று இங்கிலாந்து ரசிகர்கள் வேதனையடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. புஜாரா இந்த சீசனில் சசெக்ஸ் அணிக்காக 3 சதங்களை எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 54.08.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE