“6 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கம்” - ரிஷப் பண்ட் ஆட்டத்திறனுக்கு கில்கிறிஸ்ட் புகழாரம்

By ஆர்.முத்துக்குமார்

இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் தன் சொந்த மண்ணில் தன் மக்கள் முன்னிலையில் ஆட முடியாமல் போனது நிச்சயம் ரிஷப் பண்ட்டிற்கு வேதனையையே ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணிக்குள் வந்து ஆறு ஆண்டுகள் இருக்கும் அதற்குள் அணிக்குள் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார் அவர் என்று விதந்தோதுகிறார் ஆஸ்திரேலிய கீப்பர்/பேட்டர் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட்.

ரிஷப் பண்ட் தனது 25-வது வயதில் 2017-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் எதிரணிகளை அச்சுறுத்தும் ஒரு விக்கெட் கீப்பர்/பேட்டராக உருவெடுத்தார். இந்திய அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் என்று இவரைத்தான் கூற முடியும் என்னும் அளவுக்கு புகழேணியில் விறுவிறுவென ஏறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 73 என்றால் தெரிந்து கொள்ளலாம் இவரது வீரதீர பேட்டிங் பற்றி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் 274 ரன்கள் இதில் பிரிஸ்பனில் 30 ரன்களுக்கும் மேலான இலக்கை வெற்றிகரமாக விரட்டி ஆஸ்திரேலியாவில் இருமுறை தொடரை வென்ற துணைக்கண்ட அணி என்ற சாதனை நிகழ்ந்தது.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ஆதர்சமான ஆஸ்திரேலிய கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்போது, “இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ரிஷப் பண்ட் வந்த பிறகு அவரைப்பார்த்து உத்வேகம் பெற்று அவரைப்போலவே அதிரடியாக ஆட வேண்டும் என்ற போக்கு இப்போது விக்கெட்கீப்பர்/பேட்டர்களிடையே ஒரு லட்சியமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு இளம் வீரர் குறுகிய காலத்தில் இத்தனை பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறார் என்பது மிகப்பெரிய விஷயம்.

இந்த உலகக்கோப்பையைப் பொறுத்த மட்டில் இந்திய அணியில் போதிய பலம் உள்ளது. கே.எல்.ராகுல் காயமடைந்தால் இஷான் கிஷன் இருக்கிறார். இஷான் கிஷனும் நன்றாக ஆடுகிறார். இப்போது இருவருமே அணியில் இடம் பிடித்து சேர்ந்த் ஆடுகின்றனர். வாய்ப்பை தன்வயப்படுத்ததில் இஷான் கிஷன் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

பாசிட்டிவ் ஆக ஆடி அணித்தேர்வாளர்கள் தன்னை அணியிலிருந்து எடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி இஷான் கிஷன் கவன ஈர்ப்பு பெறுகிறார். ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யப்போகிறார் என்றாலும் அது இஷான்கிஷன் பேட்டிங்கைப் பாதிக்கவில்லை. சுதந்திரமாக ஆடுகிறார், தன்னிச்சையாக ஆடி அபாயகரமான வீரராகத் திகழ்கிறார்.

இந்த உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள். உலகக்கோப்பைக்கு முன்பாக 3 போட்டிகள் இந்தியாவுடன் இருக்கிறது என்பதால் உலகக்கோப்பை அணியின் பலம் பலவீனங்களைக் கணிக்க ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா தென் ஆப்பிரிக்காவில் செம அடி வாங்கினார். ஆனால் இந்தியப் பிட்ச்கள் வேறுவிதம். டி20 கிரிக்கெட்டில் நிரூபித்தவர் ஜாம்பா, இப்போது 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது, இவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

அதே போல் வார்னரை மிடில் ஆர்டரில் இருக்கும் பரிசீலனையை நான் ஆதரிக்கவில்லை, அவர் டாப் ஆர்டர் வீரர், ஆக்ரோஷ வீரர் என்பதை தென் ஆப்பிரிக்காவிலும் நிரூபித்துள்ளார். எனவே அவரை பின்னால் இறக்குவதற்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அவர் டாப் ஆர்டரில் ஆடி அவர் அடிக்க ஆரம்பித்தால் எதிரணியினரும் அஞ்சுவார்கள்.” என்றார் ஆடம் கில்கிறிஸ்ட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE