ஆசிய கோப்பை IND vs SL | சிராஜ் அசத்தல் பந்துவீச்சு - 50 ரன்களில் சுருண்ட இலங்கை

By செய்திப்பிரிவு

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 50 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவேண்டிய ஆட்டம் 3.40 மணிக்கு தொடங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா - பாதும் நிஸ்ஸங்காவின் பாட்னர்ஷிப்பை முதல் ஓவரிலேயே காலி செய்தார் பும்ரா. குசல் பெரேரா டக் அவுட்டானார். ஆடுத்து 4ஆவது ஓவரில் தான் அந்த மேஜிக் நடந்தது.

4ஆவது ஓவரை சிராஜ் வீச, நிஸ்ஸங்கா விக்கெட்டானார். அவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இது இலங்கை ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்து சிராஜ் வீசிய 6ஆவது ஓவரில் தசுன் ஷனகா டக் அவுட்டானார். இதன் மூலம் 2 ஓவர்களை மட்டுமே வீசிய முஹம்மது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 6 ஓவருக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை, 10 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்புக்கு 31 ரன்களைச் சேர்த்தது.

11வது ஓவரில் சிராஜ் வீசிய பந்தில் குசல் மெண்டிஸ் 17 ரன்களில் கிளம்பினார். துனித் வெல்லலகே 8 ரன்களிலும், பிரமோத் மதுஷன் 1 ரன்னிலும், மதீஷ பத்திரன டக்அவுட்டாக 15.2 ஓவர் முடிவில் 50 ரன்களுக்குள் சுருண்டது இலங்கை. இந்தியா அணி தரப்பில் முஹம்மது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆசிய கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரை ஈட்டிய அணி என்ற வரலாற்று கரும்புள்ளியை பெற்றது இலங்கை. இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்க தேசம் 87 ரன்களில் சுருண்டது தான் குறைந்த ஸ்கோர் என இருந்தது. அதனை தற்போது இலங்கை முறியடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE