கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தியா - இலங்கை அணிகள் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5 ஆண்டுகளாக பெரிய அளவிலான தொடர்களில் கோப்பையை வென்றது இல்லை. கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த வெற்றிக்குப் பிறகு,நெருக்கடியான போட்டிகளிலும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்தியாவால் வெற்றி பெற முடியாமல் போனது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்உலகக் கோப்பை மற்றும் 2022-ம் ஆண்டுநடைபெற்ற டி 20 உலகக் கோப்பை ஆகியவற்றில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2019-ம் ஆண்டு நியூஸிலாந்திடமும், 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு இருந்தது. இந்திய அணியின் கோப்பை வறட்சிக்கு இம்முறை ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தீர்வு காணக்கூடும் என எதிர்பார்க்ப்படுகிறது.
சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தியநிலையில் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. 7 முறை சாம்பியனான இந்திய அணி இம்முறை வெற்றி பெற்றுகோப்பையை வெல்லும் பட்சத்தில் அடுத்த 3 வாரங்களில் தொடங்க இருக்கும் ஐசிசி 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பெரிய உந்துதலையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, மொகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு திரும்புவார்கள். இதனால் அணி கூடுதல் வலிமை பெறும். அக்சர் படேல் காயம் அடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான். அவர் களமிறங்காத பட்சத்தில் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குர் இடம் பெறக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் 121 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில்லிடம் இருந்து மீண்டும்ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டாப் ஆர்டரிலும் கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் நடுவரிசையிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இலங்கை அணிக்கு சவால் அளிக்கலாம். பந்து வீச்சிலும் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்களை இந்திய வீரர்கள் விரைவாக வீழ்த்தினர். 59 ரன்களுக்கு 4 விக்கெட்களை சாய்த்தனர். ஆனால்அதன் பின்னர் வங்கதேச அணியை ஆட்டத்துக்குள் மீண்டுவர இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அனுமதித்தனர். அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் ரன்களை அதிகம் விட்டுக்கொடுத்தனர். இதன் விளைவாகவே வங்கதேச அணி 265 ரன்களை எட்டியிருந்தது. இதனால் இறுதிப் போட்டியில் நடுஓவர்கள் மற்றும் இறுதிப் பகுதியில் மேம்பட்ட பந்து வீச்சை இந்திய வீரர்கள் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
12-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ள இலங்கை அணி 7-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த ஆண்டு டி 20 வடிவில் நடத்தப்பட்ட தொடரில் இலங்கை அணி வாகை சூடியிருந்தது. இம்முறை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய நிலையில் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது. எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றியை வசப்படுத்தியது.
பேட்டிங்கில் குஷால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சாரித் அசலங்கா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் 11 விக்கெட்களை வீழ்த்தி உள்ளபதிரனா, 10 விக்கெட்களை வீழ்த்திய உள்ள துனித் வெல்லலகே ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம்கொடுக்கக்கூடும். இதில் துனித் வெல்லலகே, சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியின் டாப் ஆர்டரை சிதைத்திருந்தார். மேலும் பேட்டிங்கிலும் இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான தீக் ஷனா காயம் காரணமாக விலகி உள்ளது இலங்கை அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு இடம்: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் பேட்டிங்கில் போராடிய அக்சர் படேலுக்கு விரல், தொடைப் பகுதி, முழங்கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஆசிய விளையாட்டு போட்டிக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இந்திய அணியின் அழைப்பை தொடர்ந்து அவர், நேற்று அவசரமாக கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago