வெற்றிக்கான ரன்களை சேர்த்தது எப்படி? - விவரிக்கும் சாரித் அசலங்கா

By செய்திப்பிரிவு

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 252 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. கைவசம் 7 விக்கெட்கள் இருந்த நிலையில் வெற்றிக்கு மேற்கொண்டு 42 பந்துகளில் 42 ரன்களே தேவையாக இருந்தது.

அந்த சூழ்நிலையில் இலங்கை திடீரென சரிவை சந்தித்தது. குஷால் மெண்டிஸ் (91),தசன் ஷனகா (2), தனஞ்ஜெயா டி சில்வா(5), துனித் வெல்லலகே (0) ரன்னில் வெளியேறினர். எனினும் ஆல்ரவுண்டரான சாரித் அசலங்கா நம்பிக்கையுடன் விளையாடினார். அறிமுக வீரரான ஜமான் கான் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 3-வது பந்தில் பிரமோத் மதுஷன் (1) ரன் அவுட்னார்.

எனினும் அடுத்த பந்தை சாரித் அசலங்கா பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து கடைசி பந்தில் 2 ரன்களை சேர்த்து இலங்கை அணியை வெற்றி கோட்டை கடக்க வைத்தார். வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த சாரித் அசலங்கா 47 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 12-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வெற்றிக்கு பின்னர் சாரித் அசலங்கா கூறியதாவது:

கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அதை எப்படி பெறுவது என்று யோசித்தேன். மைதானம் பெரியதுஎன்பதால் இடைவெளியை கண்டறிந்து அந்த இடத்தை நோக்கி பந்தை அடிக்க வேண்டும் எனவும் பதிரனாவை விரைந்து ஓடுமாறும் கூறினேன். ஜமான் கான், பந்தை பவுன்சர் அல்லது யார்க்கராக வீசுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர், வேகம் குறைந்த பந்தை வீசினார்.

அது வசதியாக இருந்தது. அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியாக உள்ளது. ஆட்டத்தை நான் முடித்து வைக்க விரும்பினேன். அதுதான் என் பணி. எனது புத்தகத்தில் இந்த இன்னிங்ஸை 2-வது இடத்தில் வரிசைப்படுத்த முடியும். இவ்வாறு சாரித் அசலங்கா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE