உலகக் கோப்பை தொடரில் ரவூஃப், நசீம் இருப்பார்கள்: பாபர் அஸம் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கொழும்பு: பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் முக்கியமான ஆட்டத்தில் இலங்கையிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹரிஸ் ரவூஃப், நசீம் ஷா ஆகியோர் காயம்காரணமாக களமிறங்காதது பெரியஅளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் நிலையில் இவர்களது காயம் பாகிஸ்தான் அணியின் ஸ்திரத் தன்மையை பாதிக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் பாபர் அஸம் கூறியதாவது:

ஹரிஸ் ரவூஃபின் காயம் மோசமான நிலையில் இல்லை. அவருக்கு முதுகுப்பகுதியின் பக்கவாட்டில் சிறிது அழுத்தம் உள்ளது, அவ்வளவுதான். இதனால் அவர், உலகக் கோப்பை தொடருக்கு முன் குணமடைந்துவிடுவார். ஆனால் நசீம் ஷா எப்போது குணமடைவார் என்பது எனக்கு தெரியாது. அவர், உலகக் கோப்பை தொடரில் இருப்பார் என்பது எனது கருத்து.

சிறந்த பந்துவீச்சாளர்களை இழக்கும்போது, அது உங்களுக்கும் உங்கள் அணிக்கும் இழப்பை ஏற்படுத்தும். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் முயற்சி செய்வதில் எந்தகுறையும் வைக்கவில்லை. ஆனால்சிறப்பாக முடிக்கவில்லை. பீல்டிங்கில் நாங்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. பந்து வீச்சில் நடு ஓவர்களில் பிரச்சினை உள்ளது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். உலகக் கோப்பைக்கு முன்னதாக அனைத்தையும் சரி செய்வோம். இவ்வாறு பாபர் அஸம் கூறினார். - ஏஎப்பி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE