பாதுகாப்புக்காக வீரர்கள் நெக் புரொட்டக்டர்களை அணிவது அவசியம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

சிட்னி: வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது நெக் புரொட்டக்டர்களை அணிவது அவசியம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கடந்த 2014 முதலே வீரர்கள் நெக் புரொட்டக்டர்களை அணிவது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா பரிந்துரைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தும் ஆஸி. அணியின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா போன்ற வீரர்கள் அதை தவிர்த்தனர். நெக் புரொட்டக்டரை அணிந்து விளையாடுவது அசவுகரியமாக இருப்பதாக தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது ரபாடா வீசிய பவுன்சர் கேமரூன் கிரீனை தாக்கியது. அவர் கன்கஷன் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து 2 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த சூழலில்தான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் அக்டோபர் முதல் நெக் புரொட்டக்டரை அணிந்து விளையாட தவறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஹெல்மெட் உடன் நெக் புரொட்டக்டரை அணிந்து கொள்ள வேண்டும்.

“நெக் புரொட்டக்டர் அவசியம் என்பதால் அதை அணிந்து கொண்டு பயிற்சி செய்து, பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பு அதை அணிந்து விளையாடும் போது ஆட்டத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை” என ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE