காமன்வெல்த்: சாய்னா விலகல்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால் விலகியுள்ளார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியின்போது சாய்னாவின் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலிருந்து அவர் முழுமையாகக் குணமடையாததைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: போட்டியிலிருந்து விலகுவது என நான் எடுத்த முடிவு மிகக் கடினமான ஒன்று. ஆனாலும் அது மிக முக்கியமான ஒன்று. ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் போட்டியின் முதல் சுற்றின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. அதன்பிறகு எனது காலில் கொப்புளங்கள் தோன்றின. ஆனாலும் சாம்பியன் ஆனேன். காயத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வார காலம் எடுத்துக்கொண்டேன். பயிற்சி மேற்கொள்ள மிகக் கடினமாக இருந்தது. அதனால் போட்டியிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன். காமன்வெல்த் போட்டியில் விளையாட முடியாமல் போனது மிக வருத்தமான ஒன்று.

இந்த சீசனில் அடுத்ததாக நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதி பெறும் வகையிலேயே காமன்வெல்த் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்தேன். கிளாஸ்கோ நகருக்கு சென்று விளையாட முடியும் என்ற நம்பிக்கையில்தான் பயிற்சியைத் தொடங்கினேன். ஆனாலும் அதிக அளவு சிரத்தை எடுத்து மீண்டும் காயத்தில் சிக்க விரும்பவில்லை என்றார்.

கடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான சாய்னா நெவால், இந்த முறை விலகியிருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE