இந்திய ஜாம்பவான்களை அசரடித்த இலங்கை அணியின் புத்தெழுச்சி நட்சத்திரம் துனித் வெல்லலகே!

By ஆர்.முத்துக்குமார்

இந்திய அணிக்கு இர்பான் பதான் வருகை தந்தபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, ஆரவாரம் போல் இலங்கையில் நேற்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இடது கை ஸ்பின்னர் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பிறகும், அற்புதமாக பேட் செய்து 42 ரன்களை எடுத்தபோதும் இலங்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. துனித் வெல்லலகேவுக்கு வயது 20 தான்.

துனித் வெல்லலகே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கு புதிதானவர் அல்ல. இவர் நேற்று ஆடியது 13-வது ஒருநாள் போட்டி. 13 போட்டிகளி 18 விக்கெடுகளைக் கைப்பற்றியதில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கும் இந்திய அணிக்கே அவர் கிலி காட்டினார். முதல் 3 ஓவர்களில் ஷுப்மன் கில்லுக்கு அற்புதமான லெந்தில் பந்தை லேசாகத் திருப்ப பவுல்டு ஆனார். அடுத்த ஓவரில் விராட் கோலியை ஷார்ட் மிட்விக்கெடில் கேட்ச் ஆக்கினார். அடுத்த ஓவரிலேயே கால்கள் நகராத ரோஹித் சர்மாவை ஒரு ‘ஸ்கிட்’ டெலிவரியில் பவுல்டு செய்ய. அட! யாருப்பா இது! என்று அனைவரையும் ஆச்சரியப்படச் செய்தார். பிறகு ராகுல், ஹர்திக் பாண்டியா என்று இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பையே உடைத்தார்.

அனைத்திற்கும் மேலாக வெல்லலகே ஒரு சிறந்த பீல்டராகவும் திகழ்கிறார். இவரது செயல்பாடுகளைக் களத்தில் பார்க்கும் போதே இவர் விரைவில் அனைத்து ரசிகர்களின் ‘டார்லிங்’ ஆகி விடுவார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. உலகக்கோப்பையின்போது இந்திய அணி தங்களுக்குச் சாதகமாக ஸ்பின் பிட்சைப் போட்டுக் கொண்டால் அந்த எலிப்பொறியில் இந்திய அணியே சிக்கி விடும் என்பதற்கு ஒரு சிறு அலிபியாகத் திகழ்ந்தது வெல்லலகேயின் ஸ்பின் பந்து வீச்சு.

பாகிஸ்தானிடம் 228 ரன்கள் வெற்றியைச் சாதித்த இந்திய அணியை அதன் தன்னம்பிக்கையைக் குலைக்குமாறு வீசினார் வெல்லலகே. பேட்டிங்கில் ஏறக்குறைய யாராவது ஒருவர் இவருடன் நிலைத்து ஆடியிருந்தால் வெற்றி பெற்றே கொடுத்திருப்பார் என்றுதான் தோன்றியது. இவரது பந்து வீச்சில் சிக்கல்கள் எதுவும் இல்லை. ஸ்மூத் ரன் அப், நேரடியான ஆக்‌ஷன். மேலும் இவர் இந்திய அணியின் ஸ்பின் அனுபவத்தையே கேள்விக்குப்படுத்துமாறு தன் பந்தின் கோணத்தையும் வேகத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சில பந்துகள் ‘விளையாடவே முடியாதவை’ என்ற தரத்தில் அமைந்தன.

நீண்ட காலத்திற்குப் பிறகு அதாவது ஜெயசூரியா, ரணதுங்கா, அரவிந்த டிசில்வா, முரளிதரன் காலத்திற்குப் பிறகு இலங்கை ரசிகர்கள் ஒரு தனிப்பட்ட வீரரை உற்சாகமாக செல்லமாக மைதானத்தில் அழைத்துக் கூவியது வெல்லலகேயாகத்தான் இருக்க முடியும். வெல்லா... வெல்லா என்று ரசிகர்கள் அவரை செல்லமாக அழைத்தனர். நேற்று குல்தீப் யாதவ்வை விட வெல்லலகே சிறப்பாக வீசினார் என்றுதான் கூற வேண்டும். இலங்கை அணியின் அண்டர்-19 கேப்டனாக இருந்தவர். இவரது ஆல்ரவுண்ட் திறமை இப்போது இவரை எதிர்கால இலங்கை அணியை வழிநடத்துபவராக அடையாளப்படுத்தியுள்ளது.

பேட்டிங்கில் இவர் குல்தீப், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை விட சிறப்பாகவே ஆடினார். 42 ரன்களை எடுத்து இந்திய அணியின் இலக்கை எட்டி விடுவோம் என்று அச்சுறுத்தினார். நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மாவின் 53 ரன்களுக்கு அடுத்ததாக இந்த இளம் ஜாம்பவானின் 42 ரன்கள்தான் ஸ்கோர்கார்டில் உள்ளது. தனஞ்ஜய டி சில்வா 41 ரன்கள் எடுத்தார், இவர்கள் இருவரும் ஆடும்போது ரோஹித் சர்மா முகத்தில் டென்ஷன் படர்ந்தது. இருவரும் சேர்ந்து 47 பந்துகளில் 49 ரன்களைச் சேர்த்தனர்.

அணிக்கான வீரராக வெல்லலகே திகழ்கிறார். ஆனால் வனிந்து ஹசரங்கா வந்தால் யாரை அணியிலிருந்து நீக்குவது என்பது இலங்கை அணிக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை. ஆனால் மகிழ்ச்சியான பிரச்சனை. வெல்லலகேவை இனி ஒரு ஆல்ரவுண்டராக எழுச்சி பெற தொடர் வாய்ப்புகளை இலங்கை வழங்க வேண்டும். இவர் வெறும் ஆல்ரவுண்டராக மட்டும் எழுச்சிபெறக் கூடியவர் அல்ல; அதையும் தாண்டி கேப்டன்சிக்கான வீரர் என்பதையும் இங்கு நாம் குறிப்பிட்டு விடுவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE