பாக். அணியில் ‘2 வேகங்கள்’ சேர்ப்பு

By செய்திப்பிரிவு

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹரிஸ் ரவூஃப் 5 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் அதன் பின்னர் களமிறங்கவில்லை.

அவருக்கு முதுகுப்பகுதியின் பக்க வாட்டில் காயம் ஏற்பட்டிருப்பதும் அந்த பகுதியில் வீக்கம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் 10 ஓவர்கள் வீசிய நசீம் ஷா பீல்டிங்கின் போது காயம் அடைந்தார். தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வெளியே சென்ற அவர், பேட்டிங்கின் போது களமிறங்கவில்லை.

இந்நிலையில் இவர்களுக்கு மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களான ஷாநவாஸ் தஹானி, ஜமான் கான் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் நாளை (14-ம் தேதி) மோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE