IND vs SL | இலங்கையை வென்றது இந்தியா: 4 விக்கெட்களை வீழ்த்தினார் குல்தீப்!

By செய்திப்பிரிவு

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மூவரை துரிதமாக வெளியேற்றினர் பும்ராவும், சிராஜும். இருந்தும் சதீரா சமரவிக்ரமா மற்றும் சாரித் அசலங்கா இணைந்து 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அவர்கள் இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். இலங்கை கேப்டன் ஷனகா விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினர். பின்னர் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் துனித் வெல்லலகே இணைந்து 63 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி இந்திய அணியின் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பை மெல்ல இலங்கையின் பக்கம் திருப்பியது. அந்த சூழலில் தனஞ்ஜெயா டி சில்வா விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். 41 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா மற்றும் மதீஷா பதிரனா தங்களது விக்கெட்களை இழந்தனர். முடிவில் 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர்-4 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வங்கதேச அணியுடன் இந்தியா சூப்பர்-4 சுற்றின் கடைசிப் போட்டியில் விளையாடி உள்ளது. இந்திய அணிக்காக அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் குல்தீப் யாதவ். பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தனர். சிராஜ் மற்றும் பாண்டியா ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்ளும்.

துனித் வெல்லலகே இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 46 பந்துகளில் 42 ரன்களை அவர் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE