ஆசிய கோப்பை IND vs SL | துனித், சாரித் கூட்டணியில் வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் - இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

இலங்கை: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 213 ரன்களை சேர்த்துள்ளது. இலங்கை வீரர்கள் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், சாரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர்.

ஆசிய கோப்பை தொடர் போட்டிகளின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் இணை 11 ஓவர்கள் வரை பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். துனித் வெல்லலகே வீசிய 12ஆவது ஓவரில் 19 ரன்களில் அவுட்டானார் கில்.

அடுத்து களத்துக்கு வந்த கோலியின் விக்கெட்டையும் தூக்கினார் பவுலர் துனித். பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசி அதிரடி காட்டிய கோலி இந்த ஆட்டத்தில் 3 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து ரோகித்தையும் துனித் வெல்லலகே விடவில்லை. அவரையும் போல்டாக்கி தனது பவுலிங் ஆதிக்கத்தை பறைசாற்றினார். பொறுப்பாக ஆடிய ரோகித் 53 ரன்களில் பெவிலியன் திரும்பினார். (இந்த ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அவர் 10ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்). 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை தாரைவார்த்த இந்தியா 109 ரன்களைச் சேர்த்திருந்தது. களத்தில் கே.எல்.ராகுல் - இஷான் கிஷன் இருந்தனர்.

அடுத்த 10 ஓவர்கள் விக்கெட்டுகள் விழாமல் பாட்னர்ஷிப் அமைத்து ஆடிய இந்த இணையை பிரித்தார் துனித் வெல்லலகே. கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட். இஷான் கிஷன் 33 ரன்களில் விக்கெட்டான 35ஆவது ஓவரில் இந்தியா ஒரு ரன்களைக் கூட சேர்க்கவில்லை. ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும், பும்ரா 5 என சொற்ப ரன்களில் அவுட்டானது இந்திய அணியின் தடுமாற்றத்தை உணர்த்தியது.

பும்ரா போல்டான அதே ஓவரில் குல்தீப் யாதவ்வும் டக்அவுட் ஆனதன் மூலம் பவுலர் சாரித் அசலங்கா ரன் எதுவும் கொடுக்காமல் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். மழையால் ஆட்டம் தாமதமானது. பின் தொடங்கிய ஆட்டத்தில் அக்சர் படேலும், முஹம்மது சிராஜூம் இலங்கை பந்துவீச்சில் தாக்குப்பிடித்து ஆடினாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மஹீஷ் தீக்சனா வீசிய பந்தில் அக்சர் படேல் 26 ரன்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி 213 ரன்களுடன் சுருண்டது.

மொத்த இந்திய அணியையும் இலங்கையைச் சேர்ந்த இரண்டே வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், சாரித் அசலங்கா 4விக்கெட்டுகளையும் வீழ்த்தி தங்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்தினர். கடைசியாக இருந்த ஒரு விக்கெட்டை மஹீஷ் வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE