கோலிக்கு பதிலாக ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுக்குக் கொடுத்திருக்கலாம்: கவுதம் கம்பீர்

By ஆர்.முத்துக்குமார்

சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்ஷா போக்லே சர்ச்சையாக பேசினால் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிசிசிஐ இப்போது கவுதம் கம்பீர் சமீப காலங்களாக பிதற்றி வரும் சர்ச்சைக் கருத்துகளுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காப்பது, அவர் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகத்தான் பொருள்படும். நேற்று ஆசியக் கோப்பை போட்டியில் விராட் கோலி பாகிஸ்தான் பந்து வீச்சைப் புரட்டி எடுத்ததோடு விக்கெட்டுகளுக்கு இடையில் கடுமையாக ஓடி உழைத்து எடுத்த சதத்துக்காகவும், நேற்று அவர் முறியடித்த சாதனைகளுக்காகவும் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் குல்தீப் யாதவுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.

மழையால் பாதிக்கப்பட்டு 2ம் நாள் தொடர்ந்த ஒரு நாள் போட்டியில் நேற்று கே.எல்.ராகுலையும் விராட் கோலியையும் பாகிஸ்தானால் பிரிக்க முடியவில்லை. இருவரும் சேர்ந்து சதம் எடுத்ததோடு 25.5 ஓவர்களில் 209 ரன்களை விளாசித்தள்ளியது, கிட்டத்தட்ட ஓவருக்கு 8 ரன்கள் பக்கம் பின்னி எடுத்தனர். இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் அரைசதம் எடுத்தால் ஸ்கோர் எங்கு போய் நிற்கும் என்பதுதான் நேற்றைய மெசேஜ் ஆகும். இன்றைய கிரிக்கெட் உலகின் மிக அபாயகரமான டாப் 4 என்றால் அது இந்திய அணியின் டாப் 4 தான். கோலி 60 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை நசீம் ஷா தவறாக கணிக்காமல் இருந்திருந்தால் நேற்று கோலியின் தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தான் தப்பித்திருக்கலாம். ஆனால் விதி யாரைவிட்டது? விராட் கோலி தன் 2-வது அரைசதத்தை 29 பந்துகளில் விளாசினார். மேலும் பினிஷிங்கில் 4, 4, 6 என்று முடித்தார் விராட் கோலி.

அக்டோபர் 31, 1984 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தில் பாகிஸ்தானில் இந்திய அணி சியால்கோட்டில் ஒரு நாள் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது திலிப் வெங்சர்க்கார் (94), சந்தீப் பாட்டீல் (59) இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் பந்துகளை சியால்கோட் மைதானத்தில் அருகில் இருந்த நீச்சல் குளத்திற்குப் பந்தை அடித்துக் கொண்டிருந்தனர். இந்தியா 210/3 என்ற நிலையில் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினால் தொடரே கைவிடப்பட்டது. அன்று வெங்சர்க்கார், சந்தீப் பாட்டீல் அடித்த அடி வர்ணனையில் கேட்டது நினைவில் இன்றும் இருக்கிறது. அதை விட ஒருபடி மேலே சென்ற ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருந்தது நேற்று விராட் கோலியும் ராகுலும் ஆடியது. கோலி ஆட்ட நாயகன் விருதுக்கு முற்றிலும் தகுதியானவரே. இந்த இன்னிங்ஸுக்குக் கொடுக்காமல் வேறு எந்த இன்னிங்ஸுக்கும் கொடுக்க முடியாது என்பதுதான் சரியானது.

ஆனால் கவுதம் கம்பீர், சர்ச்சைக்கென்றே பெயர் போனவர். அவர் நேற்று கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்தான். விராட் சதமெடுத்தார், ராகுல் சதமெடுத்தார் என்பது எனக்குத் தெரியும். ரோஹித், ஷுப்மன் கில் அரைசதம் எடுத்ததையும் அறிவேன். ஆனால் பந்துகள் ஸ்விங் ஆகும் இந்தப் பிட்சில் ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்றால் மிகப்பெரிய விஷயம்.

ஏனெனில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடக்கூடியவர்கள். இதே தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்துக்கு எதிராக என்றால் நான் ஒப்புக் கொள்கிறேன், அவர்களுக்கு ஸ்பின் அவ்வளவு திறம்பட ஆட வராது. பாகிஸ்தானுடன் இந்தப் பிட்சில் எடுக்கிறார் என்றால் குல்தீப் யாதவ் எப்பேர்ப்பட்ட பவுலர் என்ற தரநிலை தெரிகிறது. காற்றில் பந்தை விடும்போதே பேட்டரை ஏமாற்றுகிறார், பந்து பிட்ச் ஆன பிறகும் பேட்டர்களால் குல்தீப்பை கணிக்க முடியவில்லை. பீட்டன் ஆகின்றனர்.

உலகக்கோப்பைக்கு முன்பாக குல்தீப் இப்படி வீசுவது இந்திய கிரிக்கெட்டுக்கு கிரேட் தான். இப்போது இரண்டு தாக்குதல் வேகப்பந்து வீச்சாளருடன் குல்தீப் என்னும் விக்கெட் டேக்கர் சேர்ந்து விட்டதால் மூவரும் எப்போது வேண்டுமானாலும் எதிரணியினரை சாய்க்க முடியும்.

பெரிய அணிக்கு எதிரகா 5 விக்கெட்டுகளை எடுக்கும் போது அது எப்போதும் நினைவில் தங்கவே செய்யும். கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தினால் கூட பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் சாய்த்ததை மறக்க முடியாது. ஸ்பின் ஆடும் நல்ல அணிக்கு எதிராக நன்றாக வீசினோம் என்றால் அது குல்தீப் யாதவுக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்றே கருதுகிறேன்” இவ்வாறு கம்பீர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்