பேட்டிங்கில் கோலி, ராகுல் அசத்தல்; பந்துவீச்சில் குல்தீப் அபாரம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

By செய்திப்பிரிவு

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 56, ஷுப்மன் கில் 58 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 8, கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மாற்று நாளான நேற்று ஆட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. எனினும் மழை காரணமாக 3 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் 4.40 மணி அளவிலேயே தொடங்கியது. விராட் கோலியும், கே.எல்.ராகுலும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தி ரன்களை வேட்டையாடினார்கள்.

ஷதப் கானுக்கு எதிராக கே.எல்.ராகுல் அடித்த ‘ஸ்வாட் ஃபிளிக்’ சிக்ஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மட்டையை சுழற்றிய கே.எல்.ராகுல் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 6-வது சதத்தை விளாசினார். மறுபுறம் இப்திகார் அகமது, நசீம் ஷா ஆகியோரது பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்ட விராட் கோலி 84 பந்துகளில், 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் தனது 47-வது சதத்தை விளாசினார்.

இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 94 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 122 ரன்களும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு கூட்டாக 233 ரன்கள் வேட்டையாடினர்.

கடந்த காலங்களில் அச்சுறுத்தலாக திகழ்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் ஷா அப்ரிடி 10 ஓவர்களை வீசி 79 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளரான ஷதப் கான் 10 ஓவர்களை வீசி 71 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

357 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. இமாம் உல் ஹக் 9 ரன்களில் பும்ரா வீசிய பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற ஷுப்மன் கில்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கேப்டன் பாபர் அஸம் 24 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் போல்டானார். பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது பஹர் ஸமான் 14, மொகமது ரிஸ்வான் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இரவு 9.20 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. ரிஸ்வான் 2 ரன்னில் ஷர்துல் தாக்குர் பந்தில் வெளியேறினார். பஹர் ஸமான் 24, ஆஹா சல்மான் 23 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் நடையை கட்டினர். தொடர்ந்து ஷதப் கான் (6), இப்திகார் அகமது (23), பாஹீம் அஷ்ரப் (4) ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பினார் குல்தீப் யாதவ். முடிவில் 32 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. காயம் காரணமாக நசீம் ஷா, ஹரிஸ் ரவூஃப் ஆகியோர் களமிறங்கவில்லை.

228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 புள்ளிகளை முழுமையாக பெற்றது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையுடன் மோதுகிறது.

சச்சினை நெருங்குகிறார்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களுடன் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை தற்போது விராட் கோலி 47 சதங்களுடன் நெருங்கி உள்ளார்.

5-வது வீரர்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் விராட் கோலி ஆவார். சச்சின் டெண்டுல்கர் (18,426), குமார் சங்ககரா (14,234), ரிக்கி பாண்டிங் (13,704), சனத் ஜெயசூர்யா (13,430) ஆகியோரும் 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

‘கொழும்பில் 4’: கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் விராட் கோலி தொடர்ச்சியாக 4-வது சதத்தை அடித்துள்ளார். இதற்கு முன்னர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் முறையே 131, 110*, 122* ரன்களை விளாசியிருந்தார். இதன் மூலம் ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, செஞ்சூரியன் மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசியிருந்தார்.

13,000: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 98 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். அவர், 267 இன்னிங்ஸ்களில் 13,024 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் 13 ஆயிரம் ரன்களை விரைவாக குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது.

சிறந்த கூட்டாளிகள்: ஆசிய கோப்பையில் அதிக ரன்களை வேட்டையாடிய ஜோடியாக மாறி உள்ளனர் விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி. இவர்கள் கூட்டாக 233 ரன்களை குவித்தனர். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மொகமது ஹபீஸ், ஜம்ஷெத் ஜோடி 224 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய ஜோடி குவித்த அதிகபட்ச ரன்களாகவும் இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 1996-ல் சச்சின், நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 231 ரன்கள் சேர்த்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE