அமெரிக்க ஓபன் டென்னிஸ் | நோவக் ஜோகோவிச் சாம்பியன்

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜோகோவிச் வென்றுள்ள 24-வது பட்டம் இதுவாகும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார். 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். 36 வயதான அவர், கடந்த 2011, 2015, 2018-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தார். மேலும் அமெரிக்க ஓபனில் அதிக வயதில் பட்டம் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றள்ளார். ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் கைப்பற்றியுள்ள 24-வது பட்டம் இதுவாகும். அவர், ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும், விம்பிள்டனில் 7 முறையும் கோப்பையை வென்று குவித்துள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அதிக முறை பட்டங்கள் வென்றிருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையையும் சமன் செய்துள்ளார் ஜோகோவிச். இருவரும் தலா 24 பட்டங்களை வென்றுள்ளனர். மேலும் ஒரே ஆண்டில் நடைபெறும் 4 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 3 பட்டங்களை 4-வது முறையாக வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஜோகோவிச். இந்த ஆண்டில் அவர், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்களிலும் தற்போது அமெரிக்க ஓபனிலும் வாகை சூடியுள்ளார். விம்பிள்டன் ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸிடம் தோல்வி அடைந்திருந்தார்.

ஜோகோவிச் கூறும்போது, “எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத்தெரியவில்லை. இது எனக்கு உலகத்தை உணர்த்துகிறது.இதை விவரிப்பது கடினம். இந்த விளையாட்டில் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட வேண்டும் என்ற எனது சிறுவயது கனவை நான் உண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்வேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன். அது தற்போது நிகழ்ந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE