அமெரிக்க ஓபன் | மேத்வதேவை வீழ்த்தி 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணி அளவில் இந்தப் போட்டி தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் இந்தப் போட்டி நடைபெற்றது.

பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு (Kobe Bryant) தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தி இருந்தார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார்.

“நான் விளையாடுவதற்காக என் பெற்றோர் நிறைய தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் என மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஜோகோவிச் வென்றுள்ளார்.

“நீங்கள் இங்கு இன்னும் என்ன செய்து கொண்டு உள்ளீர்கள் ஜோகோவிச். நான் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளேன். நீங்கள் 24 பட்டங்களை வென்று உள்ளீர்கள். நாம் இருவருக்கு இடையிலும் நீடிக்கும் போட்டி ஆரோக்கியமானது” என மேத்வதேவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE