பாகிஸ்தான் அணியை பின்னுக்குத்தள்ளி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

துபாய்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புளோயம் ஃபோன்டைன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 106, மார்னஷ் லபுஷேன் 124 ரன்கள் விளாசினார். 393 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 49, டேவிட் மில்லர் 49, தெம்பா பவுமா 46, குவிண்டன் டி காக் 45 ரன்கள் சேர்த்தனர்.

123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி 121 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடர்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE