அமெரிக்க ஓபன் டென்னிஸ் | 19 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார் கோ கோ காஃப்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரஸின் அரினா சபலெங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் 19 வயதான அமெரிக்காவின் கோ கோ காஃப். இதன் மூலம் 1999-ம் ஆண்டுக்குப் பின்னர் இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர், பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதினார். இந்த போட்டியை காண மைதானத்தில் 28,143 ரசிகர்கள் திரண்டிருந்தனர். முதல் செட்டை சபெலங்கா 6-2 என எளிதாக கைப்பற்றினார். அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த கோ கோ காஃப் 6-3 என தனதாக்கினார்.

இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் பரபரப்பானது. இதில் ஆதிக்கம் செலுத்திய கோ கோ காஃப் 6-2 என கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 6நிமிடங்கள் நடைபெற்ற மோதலில் 19 வயதான கோ கோ காஃப் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 1999-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் கோ கோ காஃப்.

முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென் றுள்ள கோ கோகாஃப் கூறும்போது, “இந்த பட்டம் எனக்கு மிகவும் அர்த்தம் உள்ளதாக அமைந்துள்ளது. நான் கொஞ்சம் அதிர்ச்சியி லேயே இருப்பதாகவே உணர்கிறேன்

கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது மனவேதனையாக இருந்தது. அந்த தருணத்தை தற்போது வென்றுள்ள பட்டம் நான் கற்பனை செய்ததைவிட இனிமையாக்கி உள்ளது.

பிரகாசமாக எரிகிறேன்: என் மீது நம்பிக்கை வைக்காதவர்களுக்கும் இந்த நேரத்தில் நேர்மையாக நன்றியை கூறிக்கொள்கிறேன். அவர்கள், என்னுள் இருக்கும் அனலில் நீரை ஊற்றுவதாக நினைத்தார்கள், ஆனால் அவர்கள் என் அனலின் மீது வாயுவை வீசி உள்ளனர். தற்போது நான், பிரகாசமாக எரிகிறேன்” என்றார். அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றுள்ள கோ கோ காஃபுக்கு பரிசுத்தொகையாக சுமார் ரூ.24.93 கோடி வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE