ODI WC 2023 | “டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் மற்றொரு கண்துடைப்பு இது” - வெங்கடேஷ் பிரசாத்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களில் சுமார் 4 லட்சம் டிக்கெட்களை நேற்று (செப்.8) வெளியிட்டது பிசிசிஐ. இந்நிலையில், டிக்கெட் விற்பனை முறை குறித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த சூழலில் இத்தொடருக்கான டிக்கெட் விற்பனை முறை குறித்து வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். முன்னதாக, தங்களால் டிக்கெட் பெற முடியவில்லை என ரசிகர்கள், சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து 4 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. நேற்று (செப்.8) இந்த டிக்கெட்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“இந்த போக்கு நல்லதுக்கு அல்ல. இதற்கு காரணமாக டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இணையவழியில் டிக்கெட் விற்பனையை முறையாக கையாளத் தெரியவில்லை என சொல்லலாம். இல்லையெனில் டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் நடைபெறும் மற்றொரு கண்துடைப்பு இது. எந்த தளத்தில், யாருக்கு, டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த முறையான தணிக்கை மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். ரசிகர்களுக்கு தவறான உத்தரவாதம் அளிக்க வேண்டாம்” என வெங்கடேஷ் பிரசாத், எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்கள் பகுதிப் பகுதியாக வெளியிடப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE