அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டியில் கோ கோ காஃப், சபலெங்கா

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலெங்கா, அமெரிக்காவின் கோ கோ காஃப் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 17-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கீஸுடன் மோதினார். 2 மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலெங்கா 0-6, 7-6 (7-1), 7-6 (10-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 10-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதினார். இதில் கோ கோ காஃப் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் அரினா சபலெங்கா - கோ கோ காஃப் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஆடவருக்கான இரட்டையர் அரை இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது பிரான்ஸின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட், நிக்கோலஸ் மஹுட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் போபண்ணா ஜோடி அமெரிக்காவின் ராஜீவ் ராம், இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி ஜோடியுடன் மோதுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE