இந்தியா - பாக். போட்டிக்கு ரிசர்வ் நாள் அறிவிப்பு: மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் நடத்தப்படும்

By செய்திப்பிரிவு

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை மறுநாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவடைந்து தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் ஆட்டம் லாகூரில் நடைபெற்ற நிலையில் மீதம் உள்ள 5 ஆட்டங்களும் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை (10-ம் தேதி) பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி நடைபெறும் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டால் மறுநாள் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

லீக் சுற்றில் இரு அணிகளும் கண்டியில் உள்ள பல்லேகலேவில் மோதிய ஆட்டம் மழைகாரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே மைதானத்திற்கு வந்திருந்தனர். இதனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுக்கு இழப்பீடு கோரி கடிதம் எழுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில்தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற ஆட்டங்களுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE