முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கிய லபுஷேனால் ஆஸி. வெற்றி

By செய்திப்பிரிவு

புளோயம்ஃபோன்டைன்: தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கிய மார்னஷ் லபுஷேனின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவின் புளோயம்ஃபோன்டைன்டைன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா142 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மார்கோ யான்சன் 32, எய்டன் மார்க்ரம் 19, ஹென்ரிச் கிளாசன் 14, குயிண்டன் டி காக் 11 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3, மார்கஸ் ஸ்டாயினிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

223 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. டேவிட் வார்னர் 0, டிராவிஸ் ஹெட் 33, கேப்டன் மிட்செல் மார்ஷ் 17, ஜோஷ் இங்லிஸ் 1, அலெக்ஸ் கேரி 3, மார்கஸ் ஸ்டாயினிஸ் 17, சீன் அபோட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன்ரன் ஏதும் எடுக்காத நிலையில் மார்கோயான்சன் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்தில் ஹெல்மட்டில் அடிவாங்கினார்.

இதனால் அவருக்கு மூளை அதிர்ச்சி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக மார்னஷ் லபுஷேன் களமிறக்கப்பட்டார். அவர், ஆஷ்டன் அகருடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்து அணியைவெற்றிக்கு அழைத்துச் சென்றார். தேவையான ரன் விகிதம் ஓவருக்கு 2 மட்டுமே என்பதால் இவர்கள் இருவரும் 14 ஓவர்களுக்கு ஒன்று, இரண்டு ரன்களாகவே சேர்த்தனர். இந்த காலக்கட்டத்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.

இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 40.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள்எடுத்து வெற்றி பெற்றது. மார்னஷ் லபுஷேன் 93 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், ஆஷ்டன் அகர் 69 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா, ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE