சர்ச்சைக்குரிய பெனால்டியால் ஈராக் அணியிடம் இந்தியா தோல்வி

By செய்திப்பிரிவு

சியங் மாய்: கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் ஈராக்கிடம் தோல்வி அடைந்தது.

தாய்லாந்தின் சியங் மாய் நகரில் கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஈராக் அணிகள் நேற்று மோதின. 16-வது நிமிடத்தில் இந்திய வீரர் மகேஷ் நோரெம் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. 28-வது நிமிடத்தில் ஈராக் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை கரிம் அலி கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. 51-வது நிமிடத்தில் ஈராக் அணியின் கோல் கீப்பர் ஜலால் ஹசன் சுய கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.

79-வது நிமிடம் வரை இந்த நிலையே நீடித்தது. அப்போது பாக்ஸ் பகுதிக்குள் வைத்து ஈராக் வீரர் அய்மன் கத்பனை இந்திய அணியின் டிபன்டர்கள் எளிதான முறையிலேயே தடுத்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி தடுத்ததாக கூறிய நடுவர் ஈராக் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார்.

இதை அய்மன் கத்பன் கோலாக மாற்ற நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. போட்டி விதிமுறைகளின் படி ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படாமல் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஈராக் 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE