அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் கால்பதித்தார் அல்கரஸ்; மகளிர் பிரிவில் அரினா சபலெங்கா, மேடிசன் கீஸ் அசத்தல்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் அரினா சபலெங்கா, மேடிசன் கீஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றில் நுழைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 12-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவெரேவுடன் மோதினார். 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கரஸ் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியனான அல்கரஸ் அரை சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதுகிறார். 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான டேனியல் மேத்வதேவ் கால் இறுதி சுற்றில் 8-ம் நிலை வீரரான சகநாட்டைச் சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார். இதில் மேத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.இந்த ஆட்டம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 23-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜெங் குயின்வெனுடன் மோதினார். ஒரு மணி நேரம் 13 நிமிடங்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் சபலெங்கா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் நுழைந்தார்.

அரை இறுதி சுற்றில் அரினா சபலெங்கா, 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதுகிறார். 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் 2-வது இடம் பிடித்த மேடிசன் கீஸ், கால் இறுதி சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை எதிர்கொண்டார். இதில் மேடிசன் கீஸ் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE