உலகக் கோப்பை கிரிக்கெட்: 4,00,000 டிக்கெட்களை இன்று வெளியிடுகிறது பிசிசிஐ

By செய்திப்பிரிவு

மும்பை: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை அண்மையில் ஆன்லைனில் நடைபெற்றது. ஐசிசி-யின் முதன்மை டிக்கெட்விற்பனை தளங்கள் இந்தப் பணியை கவனித்தன. அதில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்கள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.

எனினும் ஏராளமான ரசிகர்கள் தங்களால் டிக்கெட் பெற முடியவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அதே நேரத்தில் இரண்டாம் நிலை சந்தை டிக்கெட்களின் விற்பனை தொடங்கியது. இதில் பிரீமியம் டிக்கெட்களின் விலை ரூ.57 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் 4 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதன்படி ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்களின் பொது விற்பனை இன்று (8-ம் தேதி) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. tickets.cricketworldcup.com என்ற தளத்தின் மூலம் டிக்கெட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE