வெற்றிக்குத் தேவை இன்னும் 178 ரன்கள், இருப்பது 6 விக்கெட்டுகள்: சாதனை வெற்றியை ஈட்டுமா இங்கிலாந்து?

By ஆர்.முத்துக்குமார்

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரேலியாவில் தன் முதல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 138 ரன்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து 354 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி வரும் இங்கிலாந்து 4-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றிக்குத் தேவை இன்னும் 178 ரன்கள், கையிலிருப்பதோ 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் கேப்டன் ஜோ ரூட் ஆணித்தரமான ஒரு இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். கிறிஸ் வோக்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஆஷஸ் தொடர் விறுவிறு கட்டத்தை எட்டியுள்ளது.

டேவிட் மலானின் ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்த பாட் கமின்ஸ், கிறிஸ் வோக்ஸையும் யார்க்கரில் வீழ்த்த முயற்சி செய்தார், ஆனால் நடக்கவில்லை. ஸ்மித் 2 ரிவியூக்களிலும் தோல்வி அடைந்து இழந்ததால் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார்.

4-வது இன்னிங்ஸில் 354 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதேயில்லை, எனவே இதில் வெற்றி பெற்றால் அது இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் சாதனை வெற்றியாகும். மேலும் டெஸ்ட் வரலாற்றில் டாப் 10 விரட்டல்களில் இதுவும் ஒன்றாக மாறும்.

இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய போதே ஆஸ்திரேலிய பதற்றம் தெரிந்தது, காரணம் ஜோஷ் ஹேசில்வுட் ரவுண் த விகெட்டிலிருந்து ஒரு பந்தை உள்ளே செலுத்த அலிஸ்டர் குக் கால்காப்பில் வாங்கினார், கடும் முறையீடு எழ நடுவர் நாட் அவுட் என்றார். ஸ்மித் சந்தேகத்துடனேயே ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஆனால் ரிப்ளேயில் லெக் ஸ்டம்பை அந்தப் பந்து தாக்கும் என்று தெரிந்தவுடன் பெரிய திரையில் பார்த்து விட்டு ஸ்மித் பெரிய அளவில் ஏமாற்றமடைந்தார்.

ஆனால் குக், மார்க் ஸ்டோன்மேன் திடமான ஒரு தொடக்கத்தை கொடுத்து நம்பிக்கை அளித்தனர். 53 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மார்க் ஸ்டோன்மேன் மிட்செல் ஸ்டார்க் அவரது பேடைக் குறி வைத்து வீசிய போது 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு 3 ரன்களை ஒரே திசையான மிட்விக்கெட்டிலேயே அடித்து 15 ரன்கள் விளாசினார், பிறகு அலிஸ்டர் குக், ஜோஷ் ஹேசில்வுட்டை இரண்டு புல்ஷாட் பவுண்டரிகளை விளாசினார், முதல் 36 ரன்களில் 7 பவுண்டரிகள் விளாசப்பட்டன.

நேதன் லயன் பந்து வீச வந்தவுடன், இங்கிலாந்து பதற்றமடைந்தது, காரணம் அவர் மிக அருமையாக வீசினார், தொடர்ந்து பந்துகளைத் திருப்பி கடுமையாக பீட் செய்தார்.கடைசியில் ஒரு பந்தை திருப்பாமல் நேராக செலுத்த குக் எல்.பி.ஆனார். இதுவும் ரிவியூவில்தான் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ஸ்மித் சரியாகவே ரிவியூவில் இம்முறை தவறிழைக்கவில்லை.

ஸ்டோன்மேன் பந்துக்கு 1 ரன் என்ற விகிதத்தில் எடுத்து வந்தவர் கட்டிப்போடப்பட்டார் 65 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை தொட்டார் கெட்டார், கவாஜா அருமையாகக் கேட்ச் எடுத்தார்.

ஜோ ரூட், வின்ஸ் சேர்ந்து ஸ்கோரை 54/2 என்ற நிலையிலிருந்து 91 ரன்களுக்கு உயர்த்தினர் வின்ஸ் 15 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் தளர்வான ஷாட்டுக்கு ஹேண்ட்ஸ்கம்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் கடும் நெருக்கடியில் ரூட்டுடன் இணைந்தார் டேவிட் மலான், இருவரும் கடும் அழுத்தங்களுக்கிடையே 78 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜோ ரூட் வெறுமனே அவுட் ஆகாமல் இருந்தால் போதும் என்று ஆடவில்லை, அடித்தும ஆடினார், ஒருமுறை லயன் பந்து ஒன்றை ஆடாமல் கால்காப்பில் வாங்க நடுவர் அவுட் கொடுத்தார், ஆனால் ரிவியூவில் அவுட் இல்லை என்று மாறியது. 80 பந்துகளிக்ல் 4 பவுண்டரிகளுடன் டேவிட் மலான் 29 ரன்கள் எடுத்த நிலையில் கமின்ஸ் வேகத்தில் ஆஃப் ஸ்டம்பை இழந்தார். 169/4 என்று ஆன பிறகு மேலும் சேதமில்லாமல் இந்த தினத்தை 176/4 என்று முடித்துள்ளனர்.

இன்று காலை 53/4 என்று தொடங்கியது. நேதன் லயன் 14 ரன்களுக்கு உறுதியாகவே ஆடிவந்தார், ஸ்டூவர்ட் பிராட் ஒரு பவுன்சரை வீச ஹெல்மெட் கம்பியில் அடிவாங்கி நிலைகுலைந்தார், அதன் பிறகு ஒரு பவுன்சரை அப்பர் கட் செய்தார், இன்னொரு பவுன்சர் என்று பயந்து நகர்ந்து சென்று பாயிண்டில் பவுண்டரி அடித்தார், இன்னொரு பவுன்சர் தலையை நோக்கி வர விலகினார், ஆனால் அவர் கண்களில் பயம் தெரியத் தொடங்கியது. அதே பயத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரு டெய்ல் எண்டர் பாணி ஷாட் ஆட பார்த்தார் மிட் ஆஃபில் பிராடிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஆண்டர்சன் பிறகு பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பையும் ஸ்லிப் கேட்சில் வீழ்த்தினார். டிம் பெய்ன் 11 ரன்களில் வோக்ஸ் பந்தை ஹூக் செய்தார், ஆனால் கிரெய்க் ஓவர்டன் அருமையாக பைன்லெக்கிலிருந்து ஓடிவந்து டைவ் அடித்துக் கேட்ச் எடுத்தார். அபாய வீரரும் பார்மில் உள்ளவருமான முதல் இன்னிங்ஸ் சதநாயகன் ஷான் மார்ஷ் அருமையான பந்தை அக்ராஸ் த லைனில் ஆடி ஸ்டம்ப்களை இழந்தார், வோக்ஸ் 4-வது விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டார்க் 20 பயனுள்ள ரன்களை எடுத்து ஆண்டர்சனின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஹேசில்வுட், ஓவர்டன் பந்தை கல்லியில் கேட்ச் கொடுக்க கமின்ஸ் 11 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியா 58 ஓவர்களில் 138 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஆண்டர்சன். நாளை 5-ம் நாள் ஆட்டம் பயங்கர விறுவிறுப்பாக அமையும் என்று ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்