“பாரத் எனும் பெயரை பாதுகாப்பற்றதாக பலர் எண்ணுவது துரதிர்ஷ்டவசம்” - சேவாக் ட்வீட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரத் எனும் பெயரை பாதுகாப்பற்றதாக பலரும் எண்ணுவது துரதிர்ஷ்டவசம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவாக சேவாக் ட்வீட் செய்திருந்தார். அதையடுத்து அவரது அந்த கருத்துக்காக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ‘நீங்கள் எம்.பி ஆகி இருக்கலாம்’ என எக்ஸ் பயனர் ஒருவர் ட்வீட் செய்தார். அதற்கு சேவாக் பதிலும் தந்திருந்தார். இந்நிலையில், மீண்டும் பாரத் பெயருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

“நம் தேசம் பாரத் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்புவதை அரசியல் நோக்கில் சிலர் பார்ப்பது வேடிக்கையானது. நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரசிகன் அல்ல. இரண்டு தேசியக் கட்சியிலும் நல்லவர்கள் உள்ளனர். எனக்கு அரசியலில் நாட்டமில்லை என்பதை நான் மீண்டும் ஒருமுறை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி இருந்திருந்தால் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலின்போது இரு கட்சிகளில் இருந்தும் வந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருப்பேன். தேர்தலில் நான் போட்டியிட எனது கள செயல்பாடு மட்டுமே போதுமானது. ஒரு விஷயத்தை மனதாரப் பேசுவதற்கும், அரசியல் ஆசைக்கும் வித்தியாசம் உண்டு. என்னுடைய விருப்பம் பாரத்.

‘இண்டியா’ என்ற பெயரில் ஒரே அணியில் இணைந்துள்ள எதிர்கட்சியினர், பாரத் என அதை மாற்றி அழைத்துக் கொள்ளலாம். அதற்கான விவரத்தை விளக்கிச் சொல்ல சிந்தனையாளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் ஒரு யாத்திரை நடத்தியது. பாரத் எனும் பெயரை பாதுகாப்பற்றதாக பலர் எண்ணுவது துரதிர்ஷ்டவசம்.

எனது பார்வையில் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே தான் தேர்தல் அரங்கேறும். இதில் சிறந்தவர் வெற்றி பெறுவார். பாரத் என நமது தேசம் அழைக்கப்பட்டால் அது எனக்கு மிகுந்த திருப்தியையும், மனநிறைவையும் தரும்” என சேவாக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE