ODI WC 2023-க்கு தேர்வான இந்திய அணி வீரர்கள்: ரோகித் படை எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

By ஆர்.முத்துக்குமார்

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இல்லை. இவர்கள் ஆசியக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடக்கையில் இந்தப் பிட்ச்களின் பெரிய அச்சுறுத்தல் அஸ்வின் அணியில் தேர்வுக்கு பரிசீலிக்கப்படாதது அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமே. அதேபோல் சஞ்சு சாம்சன் ஒரு வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றம்தான். முதலில் உலகக் கோப்பை 2023 இந்திய அணி வரிசையைப் பார்ப்போம்:

ரோகித் சர்மா (கேப்டன்)
ஷுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயஸ் அய்யர்
சூரியகுமார் யாதவ்
கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்)
இஷான் கிஷன் (வி.கீ)
ஹர்திக் பாண்டியா (துணைக் கேப்டன்)
ரவீந்திர ஜடேஜா,
அக்சர் படேல்
குல்தீப் யாதவ்
ஷர்துல் தாக்கூர்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது சிராஜ்
முகமது ஷமி

இதுதான் இறுதி 15 வீரர்கள் கொண்ட அணி. அணியை அறிவிப்பதற்கு செப்.5-ம் தேதியான இன்றுதான் கடைசி தினம் என்றாலும் செப்டம்பர் 28-ம் தேதி வரை ஐசிசி அனுமதி இல்லாமலேயே மாற்றங்கள் செய்து கொள்ளலாம். செப்.28-ம் தேதிக்கு மேல் அணியில் மாற்றங்கள் வேண்டுமென்றால் ஐசிசி அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.

பேப்பரில் பார்ப்பதற்கு மிகவும் வலுவான அணியாகத் தெரிகிறது. குறிப்பாக ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், பும்ராவின் வருகை அணிக்கு வலு சேர்க்கிறது. இருப்பதில் இதுதான் சிறந்த அணி என்றாலும் பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் அவர்களின் ஃபார்ம் இதுவரை பரிசோதிக்கப்படாமல் உள்ளது.

ரிஷப் பண்ட் இடத்தை இஷான் கிஷன் நிரப்பக் கூடிய திறமை கொண்டவர்தான் என்பதை அன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் அவர் 87/4 என்ற நிலையிலிருந்து பிரமாதமாக ஆடி 82 ரன்களை எடுத்து இந்திய அணியை மீண்டெழச் செய்தது நிரூபித்தது. ஆனால் பார்ம் குறித்த சந்தேகம் டாப் 3 வீரர்களில் ஷுப்மன் கில் மீது உள்ளது. நேபாளுடன் எடுத்த ஸ்கோரை வைத்து முடிவுக்கு வர முடியாது.

அதேபோல் சூர்யகுமார் யாதவ் என்ன செய்யப் போகிறார் என்பதும் பெரிய அளவில் ஐயத்திற்குரியதாக உள்ளது. அணியில் இடது கை பேட்டர்கள் மிடில் ஆர்டரில் இல்லாதது பெரிய குறை. எனவே இந்திய அணியை ஓரளவுக்குக் கணித்து விட முடியும். எதிரணிகள் திட்டமிடுவதற்கு வசதியாக உள்ளவாறு அணியில் வலது கை வீரர்களின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது.

பேட்டிங் வரிசையும் கணிக்கத்தக்கதே. ரோகித், கில் ஓப்பனிங், 3-ம் நிலையில் கோலி, 4-ம் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர், 5-ம் நிலையில் கே.எல்.ராகுல், பிறகு இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், ஷமி, பும்ரா இப்படி இருக்கவே அதிக வாய்ப்பு.

இரண்டு விக்கெட் கீப்பர் வேண்டாம் என்றால் கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒருவர்தான் லெவனில் இடம்பெற முடியும். அப்போது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதை எப்படி யோசிப்பார்கள் என்று இப்போது நாம் கூற முடியாது.

நடு வரிசையில் ஜடேஜா, அல்லது அக்சர் படேல், இஷான் கிஷன் என்று இடது கை வீரர்களை பயன்படுத்தினால் எதிர்பாராத் தன்மையை உருவாக்க முடியும். அதேபோல் ஓப்பனிங்கில் வலது இடது சேர்க்கை இருந்தால் நன்றாக இருக்கும். 2011 உலகக் கோப்பையில் கம்பீர், யுவராஜ், ரெய்னா என்று அதிரடி இடது படை இருந்தது; ஆனால், இந்த அணியில் அப்படிப்பட்ட வலுவான இடது கை வீரர்கள் இல்லை. இது ஒரு பெரிய குறைபாடு.

மேலும், இந்தியப் பிட்ச்களில் ரவிச்சந்திரன் அஸ்வினை உட்கார வைத்தது பெரிய தவறு என்றே கருத வேண்டியுள்ளது. அக்சர் படேல் ஆடும் பேட்டிங்கை அஸ்வினும் ஆடுவார். ஷர்துல் தாக்கூர் தேவையில்லாத ஒரு செலக்‌ஷன் என்றே பார்க்க வேண்டியுள்ளது. ஷர்துலுக்குப் பதிலாக அஸ்வினைத் தேர்வு செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அனைத்திற்கும் மேலாக ஷிகர் தவானை மீண்டும் அழைத்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. நிச்சயம் ஷிகர் தவானின் உலகக் கோப்பை அனுபவமும், இந்திய பிட்ச்களில் அவரது திறமையையும் நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஷிகர் தவானிடம் ஓர் எக்ஸ் ஃபாக்டர் உண்டு. மேலும் இடது கை வீரர். அணியில் ஒரு வெரைட்டி இருந்திருக்கும்.

ஆனால், இந்த அணியை ரொம்பவும் குறை கூறுவதற்கில்லை. இருப்பதிலேயே சிறந்த அணியை தேர்வு செய்துள்ளனர். ரோகித் படைக்கு உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்