சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா

By செய்திப்பிரிவு

சூரிச்: ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனும் இந்திய ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ராவுக்கு சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாட்டின் நட்புறவு தூதராக நீரஜ் சோப்ரா உள்ளார். சமீபத்தில் அவர், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்திருந்தார்.

இதன் மூலம் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல்வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் 25 வயதான நீரஜ் சோப்ரா.

இந்நிலையில் சூரிச் நகரில் சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் விளையாட்டு ஜாம்பவான் நீரஜ் சோப்ராவை பாராட்டுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். ஒட்டுமொத்த இளைய தலைமுறைக்கும் அவர்,ஊக்கம் அளிப்பவராக மாறியுள்ளார். அவர், சுவிட்சர்லாந்தின் நட்புறவு தூதராக இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவரது வெற்றிக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் வரவிருக்கும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE