ஆசிய கோப்பை: IND vs NEP | அபார வெற்றிபெற்று இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

பல்லகெலே: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

231 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷுப்மான் கில் கேப்டன் ரோகித் சர்மா இணை துவக்கம் தந்தது. இந்திய அணி 2.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட ஆட்டம் தடைபட்டது. இதன்பின் டக்வோர்த் விதிப்படி, இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, ரோகித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் இருவரும் அதிரடியை கையாண்டனர். இருவரும் வானவேடிக்கைகளை நிகழ்த்தி அடுத்தடுத்தது அரைசதம் கடந்தனர். இதனால், இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் 74 ரன்களும், கில் 67 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேபாளம் இன்னிங்ஸ்: போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. நேபாள அணிக்காக குஷால் புர்ட்டெல் மற்றும் ஆசிஃப் ஷேக் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் 4.2 ஓவர்களில் அவர்கள் இருவரும் கொடுத்த 3 கேட்ச் வாய்ப்பை இந்திய அணி ஃபீல்டர்கள் நழுவ விட்டனர். இருப்பினும் ஷர்துல் தாக்குர் அவர்களது பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார். பின்னர் தொடர்ச்சியாக 3 விக்கெட்களை கைப்பற்றி ஜடேஜா கெத்து காட்டினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் நேபாளம் விக்கெட்டை இழந்தது. மழை குறுக்கீடு இருந்த காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக ஆசிஃப் ஷேக் 58 ரன்கள், சொம்பல் கமி 48 ரன்கள், குஷால் புர்ட்டெல் 38 ரன்கள், திபேந்திரா ஐரீ 29 ரன்கள் மற்றும் குல்ஷன் ஜா 23 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர்.

ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். குல்தீப் யாதவ், ஓவருக்கு 3.40 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சிராஜ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷமி, ஹர்திக் மற்றும் ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நேபாள வீரர் சந்தீப் லமிச்சானே, ரன் அவுட் செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE