ஒருநாள் கிரிக்கெட்டில் மங்கும் இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் செயல்திறன்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியின் முதல் 5 ஓவர்களில் மூன்று கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டது இந்திய அணி. அதுவும் இந்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டது அணியின் அற்புத ஃபீல்டர்களான ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்.

இதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஏனெனில், அது எளிதான கேட்ச் என்பது அவர்கள் முன்வைக்கும் கருத்து. சிலர் கேட்ச் வாய்ப்பை நழுவ விட்ட வீரர்களை ட்ரோல் செய்தனர். ‘கேட்ச் நழுவ விடுவது ஒரு கலை. அதில் இவர்கள் மாஸ்டர்கள்’ என்ற அளவுக்கு கமெண்ட் செய்துள்ளனர். அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகம் கேட்ச் பிடிக்க தவறிய அல்லது நழுவ விட்ட இந்திய வீரர்களின் டேட்டாவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இப்படியாக அவர்களது ட்ரோல் நீள்கிறது.

கிரிக்கெட் போட்டிகளில் ‘Catches Win Matches’ என்ற ஆதிகால கிரிக்கெட் சொற்றொடர் ஒன்று உள்ளது. அது டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள், டி20, தி ஹன்ட்ரட் எனும் நவீன வடிவ கிரிக்கெட் என எதுவாக இருந்தாலும் பொருந்தும். 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இந்திய அணிக்கு ஏற்படுத்தியதில் கபில் தேவ் பற்றிய கேட்ச் பிரதான காரணம். அது போல ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாதிரி வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்த பல கேட்ச்களை கிரிக்கெட் உலகில் உதாரணமாக சொல்லலாம். கேட்ச் பிடிப்பதில் துல்லியம் மிகவும் அவசியம்.

2019 உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அணிகளின் கேட்ச் பிடிக்கும் செயல்திறன்!

  1. இங்கிலாந்து - 82.8%
  2. பாகிஸ்தான் - 81.6%
  3. நியூஸிலாந்து - 80.9%
  4. இலங்கை - 78.8%
  5. ஆஸ்திரேலியா - 78.5%
  6. மேற்கு இந்தியத் தீவுகள் - 77.9%
  7. வங்கதேசம் - 75.8%
  8. தென் ஆப்பிரிக்கா - 75.6%
  9. இந்தியா - 75.1%
  10. ஆப்கானிஸ்தான் - 71.2%

இந்த தரவை பார்க்கும் போது இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் செயல்திறன் மந்தமாகவே உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணியால் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லையெனனில் அது தலைவலியாக அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE