SA vs AUS டி20 தொடர் | 3-வது போட்டியிலும் வென்று தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி.!

By செய்திப்பிரிவு

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. இதில் ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அடுத்ததாக இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. ஹென்றிக்ஸ் 42 ரன்கள், கேப்டன் மார்க்ரம் 41 ரன்கள், ஸ்டப்ஸ் 25 ரன்கள் மற்றும் டோனோவன் ஃபெரேரியா 48 ரன்கள் (21 பந்துகளில்) எடுத்தனர்.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. மேத்யூ ஷார்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் விரைந்து விக்கெட்டை இழக்க ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் இங்லிஸ் இணைந்து பலமான கூட்டணி அமைத்தனர். இருவரும் 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜோஷ் இங்லிஸ், 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த ஸ்டாய்னிஸ் உடன் இணைந்து 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹெட். அவர் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். 17.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. அதன் மூலம் 3-0 என தொடரை வென்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்த ஹெட், ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE