ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு துறைக்கும் இடையிலான மோதலாகவும், உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் மோதி இருந்தன. மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி அசாத்தியமான வகையில் மட்டை வீச்சை வெளிப்படுத்தி வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.

இதனால் இன்றைய மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு ஷாகீன் அப்ரிடியின் ‘பனானா இன்ஸ்விங்கர்கள்’, ஹரிஸ் ரவூஃப், நசீம் ஷா ஆகியோரது சீரான வேகம் சவால்தரக்கூடும்.

இலங்கையில் நிலவும் மேகமூட்டமான சூழ்நிலையால் காற்றில் காணப்படும் ஈரப்பதம் காரணமாக தொடக்க ஓவர்களில் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக ஷுப்மன் கில் நெருக்கடியை சந்திக்கக்கூடும். ஏனெனில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது, கால்கள் நகர்வுகள் சிறப்பாக இருந்தது இல்லை.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் நடுவரிசை இன்னும் செட்டில் ஆகவில்லை. கே.எல்.ராகுல் காயம் காரணமாக லீக் சுற்றில் களமிறங்காததால் அணியின் சமநிலை பாதிக்கப்படக்கூடும். அவருக்கு பதிலாக களமிறங்க உள்ள இஷான் கிஷன் பேட்டிங் வரிசையில் 4 அல்லது 5-வது இடத்தில் களமிறங்கக்கூடும்.

பாகிஸ்தான் அணியானது 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இதுவரை 29 ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி உள்ளது. அதேவேளையில் இதே காலக்கட்டத்தில் இந்திய அணி 57 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடி உள்ள 29 ஆட்டங்களில் 12 ஆட்டங்கள் இந்த ஆண்டில் விளையாடப்பட்டவை ஆகும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அஸம் 689 ரன்கள், பஹர் ஸமான் 593 ரன்கள், இமாம் உல் ஹக் 361 ரன்கள் சேர்த்தனர். ஆனால் இந்த ஆண்டில் இவர்களிடம் இருந்து பெரிய அளவில் மட்டை வீச்சு வெளிப்படவில்லை.

எனினும் ஆசிய கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் நேபாளத்துக்கு எதிராக பாபர் அஸம் 151 ரன்கள் விளாசிய உள்ளது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். இந்திய அணியை போன்றே பாகிஸ்தான் அணியிலும் 4 மற்றும் 5வது இடத்தில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களிடம் நிலைத்தன்மை இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. உசமா மிர், சவுத் ஷகீல், அஹா சல்மான் ஆகியோர் இந்த இடங்களில் களமிறக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் சீரான செயல் திறன் வெளிப்படவில்லை. இவர்களுக்கு மாற்றாக 4-வது இடத்தில் களமிறங்கும் ரிஸ்வானும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி உள்ளார்.

அதேவேளையில் பின்வரிசையில் 7-வது இடத்தில் களமிறங்கும் இப்திகார் அகமது, 8-வது இடத்தில் களமிறங்கும் ஷதப் கான் ஆகியோர் மட்டை வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் இப்திகார் அகமது நேபாளம் அணிக்கு எதிராக 6-வது இடத்தில் களமிறங்கிய சதம் விளாசி அசத்தி இருந்தார். அதேவேளையில் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரின் ஆட்டத்தில் ஷதப் கான் 48 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்து இருந்தார்.

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் இரு அணிகளும் ஒரே படகில் பயணித்தாலும் பந்து வீச்சில் தனித்துவங்களை கொண்டுள்ளன. இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த மொகமது ஷமி, சீராக செயல்படக்கூடிய மொகமது சிராஜ், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். பாகிஸ்தான் அணியில் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா, ரவூஃப் கூட்டணி இந்த ஆண்டில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக ரவூஃப் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். பல்லேகலே ஆடுகளத்தில் பந்துகள் எகிறி வரும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அனைத்து வகையிலும் நெருக்கடி கொடுக்க பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முயற்சிக்கக்கூடும்.

சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுடன் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் இடம் பெறக்கூடும். குல்தீப் யாதவ் இந்த ஆண்டில் 11 ஆட்டங்களில் விளையாடி 22 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அதேவேளையில் அக்சர் படேல் 6 ஆட்டங்களில் 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். பாகிஸ்தான் அணியில் ஷதப் கான் சுழற்பந்து வீச்சில் பிரதான வீரராக திகழ்கிறார். இந்த ஆண்டில் அவர், 8 ஆட்டங்களில் 11 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். இதற்கிடையே இன்றைய போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா

பாகிஸ்தான்: பாபர் அஸம் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், பஹர் ஸமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, இப்திகார் அகமது, மொகமது ரிஸ்வான், மொகமது ஹாரிஸ், ஷதப்கான், மொகமது நவாஷ், உசமா மிர், ஃபாஹீம் அஷ்ரப், ஹரிஸ் ரவூப், மொகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாகீன் அப்ரீடி, சவுத் ஷகீல்.

நேரம்: பிற்பகல் 3 மணி

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE