டைமண்ட் லீக்கில் 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

By செய்திப்பிரிவு

சூரிச்: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான 25 வயதான நீரஜ் சோப்ரா தனது 6 முயற்சிகளில் மூன்றை ஃபவுல் செய்தார். மற்ற3 வாய்ப்புகளில் முறையே 80.79மீட்டர், 85.22 மீட்டர், 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். செக்குடியரசின் ஜக்கூப் வட்லெஜ்ச் 85.86 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். சமீபத்தில் ஹங்கேரியின் புடாபெஸ்டில் முடிவடைந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஜக்கூப் வட்லெஜ்ச் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தார். இந்த சீசனில் டைமண்ட்லீக்கில் 3-வது முறையாக பங்கேற்றுள்ள நீரஜ் சோப்ரா 23 புள்ளிகளுடன் டைமண்ட் லீக்கின் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி சுற்று வரும் 17ம் தேதிஅமெரிக்காவில் நடைபெறுகிறது.

நீளம் தாண்டுதல்: ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 7.99 மீட்டர் நீளம் தாண்டி 5-வது இடம் பிடித்தார். அவர், 14 புள்ளிகளுடன் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் நாட்டின் மில்டியாடிஸ் டென்டோக்லோ 8.20 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பிடித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE